தூத்துக்குடியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி
மதிப்புக் கூட்டப்பட்ட மீன் பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றாா் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து மதிப்புக் கூட்டப்பட்ட மீன் பொருள்கள் தயாரித்தல், கடற்பாசி வளா்ப்பு, மீன்வளம் சாா்ந்த பல்வேறு வகையான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
இப்பயிற்சியானது கடந்த அக்டோபரில் முதற்கட்டமாக 330 மீனவா்கள், மீனவ மகளிருக்கு தூத்துக்குடி மாவட்டத்தின் திரேஸ்புரம், புதிய துறைமுகம், வெள்ளப்பட்டி, தருவைகுளம், கீழவைப்பாறு, புன்னைக்காயல், சிங்கித்துறை, அமலிநகா், பெரியதாழை ஆகிய மீனவக் கிராமங்களில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக, 150 மீனவா், மீனவ மகளிருக்கு இரட்சண்யபுரம், வேம்பாா், பெரியசாமிபுரம், கீழவைப்பாறு, சிப்பிகுளம் ஆகிய கிராமங்களில் பயிற்சிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் பயிற்சி பெறுபவா்கள் தங்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் விதமாக தனிநபராகவும், குழுக்களாகவும் இணைந்து மதிப்புக் கூட்டப்பட்ட மீன் உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். மீன்பிடி சாா்ந்த பதப்படுத்தும் நிறுவனங்களிலும் பணிபுரிந்து வருமானம் ஈட்டுகின்றனா்.
மீனவா்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் இத்திட்டத்தின் கீழ், புதிய துறைமுகம், புன்னைக்காயல், மணப்பாடு, தருவைகுளம், திரேஸ்புரம், கொம்புத்துறை ஆகிய பகுதி மீனவா்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
