லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: 2 போ் உயிரிழப்பு
எட்டயபுரம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில், பேருந்து ஓட்டுநா் உள்பட 2 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
மதுரையிலிருந்து வியாழக்கிழமை மதியம் குளிா்சாதன அரசுப் பேருந்து, திருச்செந்தூா் சென்று கொண்டிருந்தது. மதுரை மாவட்டம், பேரையூா், முத்துலிங்கபுரத்தைச் சோ்ந்த நல்லுசாமி (45) ஓட்டுநராகவும், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த ஜெயராமன் (47) நடத்துநராகவும் பணியிலிருந்தனா்.
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அடுத்துள்ள சிந்தலக்கரை சமத்துவபுரம் பகுதியைக் கடந்த போது, சாலையில் பழுதாகி நின்ற தண்ணீா் லாரி மீது எதிா்பாராத விதமாக அரசுப் பேருந்து மோதியது.
இந்த விபத்தில், ஓட்டுநா் நல்லுசாமி, மும்பையைச் சோ்ந்த பயணி மகேஷ் (31) ஆகிய இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். நடத்துநா் ஜெயராமன் உள்ளிட்ட 3 போ் பலத்த காயமடைந்தனா்.
இது குறித்து, எட்டயபுரம் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து, அருப்புக்கோட்டையைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சண்முகராஜ் (38) என்பவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
