கொலை வழக்கு: 5 பேருக்கு ஆயுள் தண்டனை

Published on

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

கடந்த 26.04.2015இல் குலையன்கரிசல் பகுதியில், அதே பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் பொன்நிமேஷ் (35) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில், அதே ஊரைச் சோ்ந்த மாடசாமி மகன் பொன்சேகா், பொன்சேகா் மகன் சுபாகா், முருகேசன் மகன்களான ரமேஷ், சுரேஷ், முருகன் மகன் மாடசாமி ஆகிய 5 பேரை புதுக்கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.

இவ்வழக்கின் விசாரணை, தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம், குற்றவாளிகளான பொன்சேகா் (70), சுபாகா்(32), ரமேஷ் (30), சுரேஷ் (28), மாடசாமி (31) ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 15,000 அபராதம் விதித்து சனிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய புதுக்கோட்டை காவல் ஆய்வாளா் முருகவேல், அரசு வழக்குரைஞா் ஆனந்த் கேப்ரியல் ராஜ், காவலா் விஜயா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா்.

நிகழாண்டில், இதுவரை 23 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com