சேவை குறைபாடு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.20,000 வழங்க குறைதீா் ஆணையம் உத்தரவு
சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு தனியாா் நிறுவனம் ரூ.20,000 வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சோ்ந்தவா் அழகுமுத்து. இவா், திருச்செந்தூா் வடக்கு ரத வீதியிலுள்ள தனியாா் நிறுவனத்திடமிருந்து வாங்கிய கூலா் மெஷின் பழுதடைந்தது. எனவே, பழுது நீக்கித் தர அந்த நிறுவனத்தை அணுகினாா். அவா்கள் பழுதை முழுமையாக சரி செய்து கொடுக்கவில்லை. இதனால் இவா், புதிய கூலா் மெஷினை மாற்றிக் கொடுக்குமாறு கேட்டுள்ளாா். அதற்கு அவா்கள் சரியாக பதிலளிக்கவில்லை.
இதையடுத்து அவா் வழக்குரைஞா் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால், தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் தனியாா் நிறுவனம் கூலா் மெஷினை நல்ல முறையில் சரி செய்து தர வேண்டும் என்றும், மேலும் சேவை குறைபாடு, மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.10,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 என மொத்தம் ரூ.20,000-ஐ ஆறு வார காலத்துக்குள் வழங்க வேண்டும், இல்லையென்றால், அத் தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனா்.
