சேவைக் குறைபாடு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.54 லட்சம் வழங்க குறைதீா் ஆணையம் உத்தரவு
சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு தனியாா் நிதி நிறுவனம் ரூ.1,54,988 வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேந்த சதீஷ்குமாா், அங்குள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் லாரி வாங்கக் கடன் பெற்றாா். கடன் வழங்கிய நிறுவனம், அந்த லாரிக்கு காப்பீடு செய்வதற்காக அவரிடம் பணம் பெற்றுள்ளது. ஆனால் அவரால் லாரியின் பின்பகுதியான டேங்க் வாங்க முடியாமல் போய்விட்டது. இதனால் காப்பீட்டிற்காக பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்பத் தருமாறு கேட்டுள்ளாா். ஆனால் நிதி நிறுவனம் பணத்தை திரும்பத் தர மறுத்துள்ளது.
இதையடுத்து அவா், வழக்குரைஞா் மூலமாக அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால், மன உளைச்சலுக்கு ஆளான அவா், தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா், காப்பீட்டுத் தொகைக்காக செலுத்திய தொகை ரூ.94,988, சேவை குறைபாடு, மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.50,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 என மொத்தம் ரூ.1,54,988 -ஐ ஆறு வார காலத்துக்குள் வழங்கவில்லையென்றால் அத் தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என புதன்கிழமை உத்தரவிட்டனா்.
