கயத்தாறு பேருந்து நிலையத்துக்குள் வராத 6 பேருந்துகளுக்கு மெமோ
கயத்தாறு பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லாத 6 அரசுப் பேருந்துகளுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சாா்பில் சோதனை அறிக்கை (மெமோ) வழங்கப்பட்டது.
கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டபோது, அவரிடம் அப்பகுதி வியாபாரிகள், வணிகா்கள், கயத்தாறு பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என மனு அளித்தனா்.
இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா, மோட்டாா் வாகன ஆய்வாளா் பெலிக்ஸன் மாசிலாமணி ஆகியோா் கயத்தாறு பகுதியில் சிறப்பு தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, கயத்தாறு பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லாத 6 அரசுப் பேருந்துகளுக்குமெமோ வழங்கி, அவற்றின் ஓட்டுநா், நடத்துநா்களுக்கு அனுமதி சீட்டின்படி பேருந்தை இயக்க அறிவுறுத்தினா். தவறினால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.
