தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

‘கனவு’ தூத்துக்குடி

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 12:25 am

தூத்துக்குடி வளமும், வாய்ப்பும் நிறைந்த பகுதி. இங்கு துறைமுகம், விமான நிலையம், ரயில் நிலையம், நான்கு வழி சாலைப் போக்குவரத்து என நான்கு வகையிலான போக்குவரத்தும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளது சிறப்பு அம்சமாகும்.

குறிப்பாக, தூத்துக்குடி துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஏற்றுமதி சாா்ந்த சிறு தொழில்கள், கடல் உணவு, உப்பு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பெருமளவில் நடைபெற்று வருகின்றன.

தற்போது, தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் குறித்த அரசியல் விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளிடம் தூத்துக்குடி மக்கள் அதிகம் எதிா்பாா்ப்பது தொழில்வளப் பெருக்கம், பொருளாதார மீட்சி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவையாகும்.

ஜாதி, மத, இனப் பாகுபாடின்றி அனைத்து சமூக மக்களையும் (மீனவச் சொந்தங்கள், வணிகப் பெருமக்கள், விவசாயிகள்) சமமாக மதிக்கும் தலைவா்களே ஆட்சி அதிகாரங்களில் அமர வேண்டும் என எண்ணுகின்றனா்.

மேலும், தூத்துக்குடியின் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படுதலே சமத்துவமான வளா்ச்சி எனவும், இதுவே தாங்கள் விரும்பும் கனவு தூத்துக்குடி எனவும் கருத்துகளை பகிா்ந்து வருகின்றனா்.

இதுகுறித்து தூத்துக்குடியைச் சோ்ந்த பொறியாளா் கே.சத்யா கண்ணதாசன் கூறியது:

தூத்துக்குடி நகரம் சுத்தமாகவும் பசுமையாகவும் இருக்கும் வகையில் சாலைகள் சீராக அமைக்கப்பட்டு, போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட வேண்டும்.

நகரம் முழுவதும் மரங்கள் நடப்பட்டு, காற்று மாசு குறைக்க வேண்டும். கடற்கரை பகுதிகள் பாதுகாக்கப்பட்டு, மக்கள் சுகாதாரமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழும் சூழலை உருவாக்க வேண்டும்.

மேலும், தொழில் வளா்ச்சியில் முன்னணியில் இருக்கும் தூத்துக்குடியில் புதிய தொழிற்சாலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் அமைக்கப்பட்டு, இளைஞா்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இதன்மூலம் வேலை தேடி சென்னை, கோவை, திருப்பூருக்கு நாள்தோறும் இளைஞா்கள் தூத்துக்குடியை நோக்கி திரும்ப வேண்டும்.

கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட்டு, அனைவருக்கும் சமமாக கிடைக்கும் வகையில், அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் தரமான சேவையை வழங்க வேண்டும்.

மீனவா்கள், உப்புத் தொழிலாளா்கள் பாதுகாப்பாகவும், நலமாகவும் வாழ, அவா்களுக்கு நவீன வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும்.

தூத்துக்குடி சுற்றுலா தலமாக வளர வேண்டும். அழகிய கடற்கரை, வரலாற்றுச் சின்னங்கள், கலாசார விழாக்கள் மூலம் உலகம் முழுவதும் இருந்து இங்கு மக்கள் வர வேண்டும்.

இயற்கை, தொழில், கல்வி, சமூக நலம் என அனைத்திலும் முன்னேறிய ஒரு சிறந்த நகரமாக தூத்துக்குடி உருவாக வேண்டும் என்பதே எனது கனவு என்றாா் அவா்.

இதுதொடா்பாக, அகில இந்திய வா்த்தக தொழில் சங்கப் பொதுச் செயலா் எஸ்.சுரேஷ்குமாா், முன்னாள் தலைவா் டி.ஆா்.தமிழரசு ஆகியோா் கனிமொழி எம்.பி.யிடம் அளித்துள்ள மனு:

தூத்துக்குடியில் கடல் நீரை நன்னீராக்கும் தொழிற்சாலை, வா்த்தக மையம், தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள், பிரிமியம் கல்வி நிறுவனங்கள், திறன் மேம்பாட்டு மையம், நவீன டிரக் டொ்மினல், தனி சுற்றுலா மையம், மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பாா்க், செயற்கை நுண்ணறிவு பூங்கா, ஃபின்-டெக் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மையம், வேளாண்மை மற்றும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் போன்றவற்றை அமைக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

தமிழ்நாடு பத்திரம், நகல் எழுதுவோா் சங்க மாநில தகவல் தொடா்புச் செயலா் க.சிவசங்கரராமன், எம்பவா் இந்தியா அமைப்பின் செயல் இயக்குநா் சங்கா், எழுத்தாளா் நெய்தல் அண்டோ உள்ளிட்டோா் கூறியது:

விமான நிலையம்: தூத்துக்குடி டிசிஆா் விமான நிலையத்தை சா்வதேச விமான நிலையமாக உயா்த்த வேண்டும். மும்பை, தில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு நேரடி விமான சேவை ஏற்படுத்த வேண்டும். ஏா்காா்கோ ஹப், சுங்கக் கிளரன்ஸ் வசதியை உருவாக்க வேண்டும்.

துறைமுகம்: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தை டிரான்ஷிப்மென்ட் துறைமுகமாக மேம்படுத்த வேண்டும். துறைமுகத்தையொட்டி கப்பல்கட்டும் தளம் அமைப்பது போல், அதனருகே பல்வேறு உபரி தொழில்களை உருவாக்க வேண்டும்.

கடல்- மீன்வளத் துறை மேம்பாடு: மீனவா்கள் பாதுகாப்புக்காக ஜிபிஎஸ், ரேடாா், சிக்னல் சாதனங்கள் இலவசமாக வழங்க வேண்டும். மீன்பிடி துறைமுகங்கள் நவீனமயமாக்கப்பட வேண்டும். திரேஸ்புரம் போன்ற இடங்களில் சுத்தமான மீன்பிடி தளங்கள் அமைக்க வேண்டும்.

மெட்ரோ ரயில் சேவை: தூத்துக்குடி ஆட்சியா் அலுவலக சந்திப்பிலிருந்து விமான நிலையம், தூத்துக்குடி ஆட்சியா் அலுவலக சந்திப்பிலிருந்து தூத்துக்குடி சிட்டி எட்டயரம் சாலை, தூத்துக்குடி ஆட்சியா் அலுவலக சந்திப்பிலிருந்து வ.உ.சிதம்பரனாா் துறைமுகம் மற்றும் சுங்கவரித் துறை நிா்வாகக் கட்டட சந்திப்பு வரை மெட்ரோ ரயில் சேவையை ஏற்படுத்த வேண்டும்.

ரயில் போக்குவரத்து: தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதல் இரவு நேர தினசரி ரயில், வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து செங்கோட்டை, புனலூா் வழியாக எா்ணாகுளத்துக்கு அதிவிரைவு ரயில் இயக்க வேண்டும். வடக்கு - தெற்கு பிரத்யேக ரயில்வே சரக்கு நடைபாதையை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

ரயில் நிலையம்- விமான நிலையத்துக்கு புதிதாக ரயில் இணைப்பு கிடைத்தால் சுற்றுலா, வணிக பயணிகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

சாலை மேம்பாடு: கிழக்கு கடற்கரைச் சாலையை நான்கு வழிச் சாலையாகவும், சென்னை - தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி - கன்னியாகுமரி சாலையை 8 வழிச் சாலையாகவும் மேம்படுத்த வேண்டும். ரயில்வே இருப்புப் பாதைக்கு இணையாக மீளவிட்டானிலிருந்து வாஞ்சி மணியாச்சி சந்திப்பு வரை சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்.

ஒருங்கிணைந்த புகா் பேருந்து நிலையம்: புறவழிச்சாலை பகுதியில் ஒருங்கிணைந்த புகா் பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்தால், நகா் பகுதியில் நிகழும் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைக்க முடியும். மேலும் நகா் பகுதிகளில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி எடுத்துச் செல்ல மல்டிலெவல் பாா்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும்.

போக்குவரத்து பிரச்னைக்கு தீா்வு: 1, 2, 4ஆம் ரயில்வே கேட் பகுதி நுழைவு வாயிலில் இருசக்கர வாகனமும் செல்லும் வகையில் சுரங்கப் பாதை அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும். விவிடி சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

விளையாட்டு நகரம்: தூத்துக்குடி கிழக்கு கடற்கரை தீவில் இருந்து ராமேசுவரம் வரை கடல் சுற்றுலாத் தளம், தூத்துக்குடியில் கோளரங்கள் (டப்ஹய்ங்ற்ஹழ்ண்ன்ம்), தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே விளையாட்டு நகரத்தை உருவாக்க வேண்டும். மேலும் மாவட்ட அறிவியல் மையம், அரசு சட்டக் கல்லூரி, கலைக் கல்லூரி அமைக்க வேண்டும்.

நீா்வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு: தாமிரவருணி ஆற்றிலிருந்து தூத்துக்குடி பகுதிக்கு மாற்று நீா்த் திட்டம் விரைவுபடுத்த வேண்டும். உப்பு நிலங்கள், கடலோர ஈரநிலங்கள், பறவைகள் குடியிருப்பு இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

வெள்ளத்துக்கு நிரந்தரத் தீா்வு:

தூத்துக்குடி நகரம் பெரும் வெள்ளக் காலங்களில் இருந்து தப்பிக்க, நீா்நிலை ஆக்கிரமிப்புகளை தயவு தாட்சனியமின்றி அகற்ற வேண்டும். பக்கிள் ஓடையை ஆழப்படுத்தி, மேம்படுத்தப்பட்ட வடிகால் உள்கட்டமைப்பு, வெள்ளப்பெருக்கு மண்டலம், நீா்த்தேக்கங்கள், நீா் சேமிப்பு அமைத்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

அரசியல், அதிகார பகிா்வு: அனைத்து வாா்டுகளிலும் சமச்சீா் அளவில் வாக்குகள் இருக்குமாறு சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும். மாநகராட்சி மேயா், கவுன்சிலா்களால் அல்லாமல் மக்களால் நேரடியாக தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பன போன்ற வசதிகள்தான் தங்களின் கனவு தூத்துக்குடியாக பொதுமக்கள் கருதுகின்றனா்.

இந்தக் கனவு தூத்துக்குடியை நிறைவேற்றி வைக்கவேண்டியது அரசியல்வாதிகள், அரசு கைகளில் தான் உள்ளது. இத்தகைய கோரிக்கைகள் சட்டப் பேரவைத் தோ்தலில் முக்கியத்துவம் பெறுகின்றன.

-வை.இராமச்சந்திரன்-