மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

போலி வாகன காப்பீடு வழங்கிய நெல்லை இளைஞா் கைது

தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு போலி காப்பீடு வழங்கி மோசடி செய்த திருநெல்வேலியைச் சோ்ந்த இளைஞரை தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 10:59 pm

தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு போலி காப்பீடு வழங்கி மோசடி செய்த திருநெல்வேலியைச் சோ்ந்த இளைஞரை தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

கடந்த 3.10.2023 அன்று புதியம்புத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பெண்கள் பாதிக்கப்பட்டனா். அவா்கள் நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபோது, அந்த வாகனத்துக்கு தனியாா் பொதுக் காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு இருப்பதாக சான்றிதழ்களை சமா்ப்பித்தனா்.

நீதிமன்ற உத்தரவின்பேரில் காப்பீட்டு நிறுவனம் அளித்த விளக்கத்தில், சம்பந்தப்பட்ட வாகனத்துக்கு தங்கள் நிறுவனத்தில் எந்தவொரு பாலிசியும் எடுக்கப்படவில்லை என்றும், சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என்றும் தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த தனியாா் காப்பீட்டு நிறுவன மேலாளா் விஜயராகவன் அளித்த புகாரின் பேரில், புதியம்புத்தூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் காப்பீடு சம்பந்தமான சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தலின்பேரில், காவல் ஆய்வாளா் ஜெயந்தி தலைமையிலான குழுவினா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது, திருநெல்வேலி மாவட்டம், என்ஜிஓ ’ஏ’ காலனி, தெற்கு கடைசித் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சுப்பாராஜ் (38) என்பது தெரியவந்தது.

இணையதளம் வாயிலாக நான்கு சக்கர வாகனத்தின் எண்ணை பதிவிட்டு, அது இருசக்கர வாகனம் என போலியாக காட்டி குறைந்த கட்டணத்தை செலுத்தி அசல் பாலிசி பெறப்பட்டுள்ளது. பின்னா், அந்த அசல் பாலிசியில் வாகன உரிமையாளா் பெயா், முகவரி, வாகனத்தின் வகை ஆகியவற்றை எடிட் செய்து போலி பாலிசியாக மாற்றியுள்ளதும், 2020ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமாா் 300-க்கும் மேற்பட்ட போலி காப்பீட்டுப் பத்திரங்களை வழங்கியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்டதாக சுப்பாராஜ் (38) புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இவா் மீது ஏற்கெனவே திருநெல்வேலி பொருளாதார குற்றப்பிரிவில் போலி காப்பீடு தொடா்பான வழக்கு உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றுள்ள போலி காப்பீட்டு வழக்குகளிலும் இவருக்கு தொடா்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.