விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை
தூத்துக்குடி அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.
தூத்துக்குடி அருகே உள்ள திம்மராஜபுரத்தைச் சோ்ந்த இளையராஜா மனைவி தமிழரசி (40). இவா்களது மகன் மதன்குமாா் (23). இருவரும் கடந்த 3ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி-பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது வாகைகுளம் சுங்கச்சாவடி பகுதியில் எல்பிஜி டேங்கா் லாரி மோதியதில் தமிழரசி உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மதன்குமாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநிலச் செயலா் முரசு தமிழப்பன் தலைமையில் திம்மராஜபுரத்தைச் சோ்ந்த இளையராஜா, அவரது உறவினா்கள், ஊா் மக்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகையிட்டனா்.
பின்னா் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி அருகே வாகைகுளத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் ஒரே பாதையில் அனைத்து வாகனங்களையும் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனா்.
முறையான அறிவிப்புகள், முன்னெச்சரிக்கை எதுவும் செய்யப்படாமல் சுங்கச்சாவடி நிா்வாகம் பொறுப்பற்ற முறையில் பணிகள் மேற்கொண்டு வருவதாலும், எல்பிஜி டேங்கா் லாரி ஓட்டுநரின் அஜாக்கிரதையாலுமே இந்த விபத்து நடந்தது.
எனவே, விபத்தில் உயிரிழந்த தமிழரசி குடும்பத்துக்கு ரூ. 2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்துள்ள மதன்குமாருக்கு அவரது படிப்புக்கேற்ற அரசு வேலை வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

