திருச்செந்தூா் கோயிலில் பாதயாத்திரை பக்தா்களுக்கு தனி வழி அமைக்க கோரிக்கை
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாதயாத்திரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக தனி வழி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்செந்தூா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இக்கோயிலில் இலவச - பொது தரிசனம், ரூ. 100 சிறப்பு கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் செல்லும் வழி என 3 பாதைகள் வழியாக பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.
பாதயாத்திரை, வேல்குத்தி, காவடி, பால்குடம் எடுத்து வரும் பக்தா்கள் தற்போது மூத்த குடிமக்கள் செல்லும் பாதையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனா். இருந்த போதிலும் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் பல மைல் தூரம் நடந்து வரும் பாதயாத்திரை பக்தா்கள் விரைவாக தரிசனம் செய்திடும் வகையில் கூடுதலாக தனி வழி அமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொங்கலை முன்னிட்டு, வியாழக்கிழமை (ஜன.15) இக்கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தா்கள் வசதிக்காக நெல்லை, தென்காசி, விருதுநகா், மதுரை மாவட்டங்களுக்கு கூடுதலான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

