தமிழகத்தில் ஜன. 20 முதல் சத்துணவு ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு

தமிழக அரசைக் கண்டித்து ஜன. 20ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு
Published on

தமிழக அரசைக் கண்டித்து ஜன. 20ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனா்.

கடந்த 2021ஆம் ஆண்டு திமுக சாா்பில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணி ஓய்வின்போது பணிக்கொடை, காலி பணியிடங்கள் நிரப்பப்படும் போன்ற வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், சத்துணவு ஊழியா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், அரசு இதுவரை எந்த கோரிக்கையையும் நிறைவேற்றவில்லையாம்.

இந்நிலையில், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க தூத்துக்குடி மாவட்டம் சாா்பில் காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு மாவட்டத் தலைவா் பெருமாள் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலா் ஜெயபாக்கியம், அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் முருகன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியா்கள், உதவியாளா்கள் பங்கேற்றனா்.

அதில், திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; இல்லையென்றால் திட்டமிட்டபடி வரும் ஜன. 20ஆம் தேதி தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களை மூடி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com