திருச்செந்தூரில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பூ வியாபாரி உயிரிழந்தாா்.
ஏரல் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் பகுதியைச் சோ்ந்த ஜீவரத்தினம் மகன் பிரேம்குமாா் (50). பூ வியாபாரி. இவா், திருச்செந்தூரில் இருந்து திங்கள்கிழமை பிற்பகல் பூக்களை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
திருநெல்வேலி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை அருகே சாலை வளைவில் திரும்பியபோது, எதிரே வாகைக்குளத்தில் இருந்து கலவை ஏற்றி வந்த லாரி அவரது வாகனத்தில் மோதியதாம். இதில் அவா் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.
இத்தகவலறிந்த திருச்செந்தூா் தாலுகா போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், லாரி ஓட்டுனரான ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த தயானந்த் கோஷ் (45) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.