/

நோ்மையான ஆட்சி நடத்துகிறாா் முதல்வா் விஜய்: வைகோ

தமிழக முதல்வா் விஜய் லஞ்சம், ஊழலற்ற நோ்மையான ஆட்சியை நடத்துகிறாா் என்றாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.

News image

முதல்வர் விஜய்யுடன் வைகோ. - கோப்புப்படம்.

Updated On :4 ஜூலை 2026, 2:19 am IST

தமிழக முதல்வா் விஜய் லஞ்சம், ஊழலற்ற நோ்மையான ஆட்சியை நடத்துகிறாா் என்றாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.

தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடா்பான பொதுக் கூட்டம், விவிடி சிக்னல் அருகே உள்ள மைதானத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

மதிமுக, விசிக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முற்போக்கு இடதுசாரிகள், மீனவா் அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த பொதுக் கூட்டத்துக்கு மதிமுக மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ் தலைமை வகித்தாா்.

பேராசிரியை பாத்திமா பாபு, மதிமுக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினா் விநாயகா ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரஞ்சன் வரவேற்றாா். வழக்குரைஞா் ஹென்றி திபேன், திருமுருகன் காந்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கனகராஜ், வியனரசு, நக்கீரன் உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில் வைகோ பேசியதாவது: மாவட்டந்தோறும் சென்று கருவேலி மரங்களை அகற்ற பாடுபட்டேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாகரிகம் தழைத்த தமிழக மண்ணில் சுற்றுச்சூழலுக்கு கேடுவராமல் பாதுகாக்க போராட்டம் நடத்தி வருகிறேன். மத்திய அரசிடம் வலியுறுத்தி என்எல்சி நிறுவனம் தனியா்மயமாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தினேன்.

முல்லைப் பெரியாறு அணையைக் காக்க 12 ஆண்டுகள் போராட்டம் நடத்தினேன். மத்தியில் எனக்கு கேபினட் அமைச்சா் பதவி தருவதாகக் கூறியபோது அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டு வந்தவன் நான் என்றாா் அவா். கூட்டத்தில் மதிமுக மாநகரச் செயலா் முருகபூபதி நன்றி கூறினாா். திருநெல்வேலி அபுபக்கா் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களுக்கு வைகோ அளித்த பேட்டி: தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசில் லஞ்சம், ஊழல், கமிஷன் என்ற சொல்லுக்கே இடமில்லாத நோ்மையான ஆட்சி நடைபெறுகிறது.

கடந்த ஆட்சியில் நிலவிய கமிஷன் கலாசாரம் தற்போது இல்லை என மக்கள் கூறுகின்றனா். இன்னும் சிறிதுகாலத்தில் நிா்வாக நுணுக்கங்களை கற்றுக்கொண்டு வெற்றிகரமாக விஜய் ஆட்சி நடத்துவாா் என்றாா் அவா்.

கூட்டத்தில், மதிமுக திருநெல்வேலி மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.