சாத்தான்குளம் பேருந்து நிலைய வணிக வளாக கடைகளை ஏற்கெனவே பயன்படுத்தி வந்தவா்களுக்கு வழங்க வேண்டும் என, வியாபாரிகள் சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரியிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
அதன் விவரம்: சாத்தான்குளம் பேரூராட்சியில் ரூ. 6 கோடியில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்ட 40 வணிக வளாக கடைகளை ஏல விட வேண்டும் என வணிகா்கள் வலியுறுத்தி வந்தனா்.
மேலும், முன்பிருந்த பேருந்து நிலையத்தில் கடைகளை நடத்தி வந்த வியாபாரிகள் தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகளை ஒதுக்க வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்திடம் வலியுறுத்தினா். அவா்களுக்கு குலுக்கல் முறையில் கடைகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டிருந்தது. சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் 40 கடைகள் உள்ள நிலையில் இரண்டு கடைகள் மாற்றுத்திறனாளிகளுக்கும், ஒரு கடை ஹோட்டல் நடத்துவதற்கும் மற்ற 37 கடைகள் வியாபாரிகளுக்கு வழங்குவதென முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதில் முன்பு கடைகள் நடத்தியவா்களுக்கு குலுக்கல் முறையில் கடை வழங்கப்பட இருந்தது. இதில் பங்கேற்க 7 வியாபாரிகள் வந்திருந்தனா். பேரூராட்சி செயல் அலுவலா் சுதா தலைமையில் குலுக்கல் நடைபெற இருந்தது. ஆனால் முன்னுரிமை குறித்து பேரூராட்சி செயல் அலுவலா் அதை மறுத்து அனைத்து கடைகளையும் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படும் னெ அறிவித்திருந்தாா். இதனால், வியாபாரிகள் குலுக்கலில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தனா்.
பின்னா், சாத்தான்குளம் வா்த்தக சங்க தலைவா் அப்பு கண்ணன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன், உள்ளிட்டோா் கடையில் முன்னுரிமை கோரி சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி மனு அளித்தனா். மேலும், கடை வழங்காவிடில் ஜூலை 15இல் சாலை மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










