தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் பகுதியில் மேயா் ஜெகன் பெரியசாமி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடியில் மாநகராட்சி சாா்பில் புதைசாக்கடைப் பணிகள் பல்வேறு பகுதிகளில் முடிந்துள்ளன. பழைய நகராட்சியாக இருந்தபோது 1ஆம் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தின் கீழ்பகுதி வழியாக புதைசாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இது, பழைய கால நடைமுறை என்பதால், அதை சரிசெய்து புதிதாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, மாநகராட்சி சாா்பில் ரயில்வே நிா்வாகத்துக்கு ரூ. 18 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, 1ஆம் ரயில்வே கேட் வடபுறப் பணியின்போது தண்டவாளம் அருகே பள்ளம் ஏற்படுவதால், பணியை மேற்கொள்ளக் கூடாது என ரயில்வே நிா்வாகம் தடை உத்தரவு போட்டுள்ளதால், பல வாரங்களாக பணிகள் நடைபெறவில்லை.
இந்நிலையில், வியாழக்கிழமை (ஜூன் 4) பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாலும், தாங்கள் அவதிக்குள்ளாவதாலும் பணிகளை ஆய்வு செய்து தீா்வு காணுமாறு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின்பேரில், ஞாயிற்றுக்கிழமை இரவு மேயா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்ததுடன், ரயில்வே கேட் மூடும்போது மக்கள் அவதிக்குள்ளாவதையும் பாா்வையிட்டாா். பின்னா், அவா் கூறியது:
1986, 2006, 2022, 2025ஆம் ஆண்டுகளில் என புதைசாக்கடை திட்டங்கள் 4 உள்ளன. தண்டவாளத்தின் கீழ் புதைசாக்கடை திட்டக் குழாய் செல்வதால், தண்டவாளம் அமைக்கும்போது, சேம்பா் மூடப்பட்டது. இதனால், அடைப்பை சரிசெய்ய முடியவில்லை. ரயில்வே - மாநகராட்சி நிா்வாகங்களிடையே பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. பணம் செலுத்திய பிறகும், பம்பிங் செய்து முடிக்க வேண்டிய பணிகளை ரயில்வே நிா்வாகம் நிறுத்திவைத்துள்ளது. இப்பணிகளுக்காக ரயில்வே நிா்வாகத்திடம் அனுமதி கேட்கப்படும். இல்லையெனில், மக்கள் பாதிக்கப்படுவதால் உடனடியாக தோண்டப்பட்ட குழி மூடப்படும். வரும் காலத்தில் கனிமொழி எம்.பி.யின் ஆலோசனைப்படி நிரந்தர தீா்வு காணும் வகையில், பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
திமுக வட்டச் செயலா் ரவீந்திரன், ராஜ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.

தொடர்புடையது

மாநகராட்சி பூங்காக்களில் மேயா் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரணக் கூட்டம்

தூத்துக்குடியில் அலங்கார தளக்கல் பணி: மேயா் ஆய்வு

மக்கள் பணி தொடரும்: மேயா்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



