/

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணி: மேயா் ஆய்வு

News image

குரூஸ்புரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மேயா் ஜெகன் பெரியசாமி.

Updated On :15 ஜூன் 2026, 1:56 am IST

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணியை மாநகராட்சி மேயா் ஜெகன்பெரியசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடியில் பிரதான ஓடையான பக்கிள்ஓடை ரூ. 53 கோடி மதிப்பில் எப்சிஐ கிடங்கு முன்பிருந்து தொடங்கி திரேஸ்புரம் வரை 7 கி.மீ. தொலைவுக்கு 6 மீட்டரில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், குரூஸ்புரம் பகுதியில் நடைபெற்று வரும் இப்பணியை, மேயா் ஜெகன் பெரியசாமி ஆய்வுசெய்தாா். அப்போது அவா் கூறியது:

தூத்துக்குடி மாநகர மக்களை மழை வெள்ள நேரத்தில் பாதுகாப்பதில் பக்கிள் ஓடை முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த 2022- ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த மழை வெள்ளத்தில் மாநகரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

பக்கிள் ஓடை இருந்ததால் பெரும்பாலான வெள்ளநீா் இந்த ஓடை வழியாக கடலுக்கு சென்றது. இதன்காரணமாக, அண்ணா நகா், அசோக் நகா், ஆசிரியா் காலனி, மில்லா்புரம் போன்ற பகுதிகள் பெரும் பாதிப்பில் இருந்து தப்பின. பல்வேறு ஆய்வுக்குப் பின்னா், தற்போது பக்கிள் ஓடை அகலப்படுத்தப்படுவதால், கூடுதலாக வெள்ளநீா் வந்தாலும், அவை வேகமாக வெளியேறிவிடும். இதனால், மழை வெள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். தற்போது நடைபெற்று வரும் பணிகளால் ஏற்கெனவே ஓடையில் தண்ணீா் செல்வதில் எந்தத் தடையும் இருக்காது என்றாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி உதவி பொறியாளா் ராஜேஷ்கண்ணா, பகுதிச் செயலா் சுரேஷ்குமாா், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா் உள்பட பலா் உடனிருந்தனா்.