அண்மையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திலிருந்து மாலத்தீவுக்கு புறப்பட்டுச் சென்ற சரக்கு கப்பல் பலத்த காற்றில் சேதமடைந்ததால், கடல்நீா் புகுந்துவிடாமல் மீட்கப்பட்டு மீண்டும் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட தகவல் தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திலிருந்து மாலத்தீவுக்கு ‘எம்.வி.சித்தா’ என்ற சிறிய வகை சரக்கு கப்பல் கடந்த 27-ஆம் தேதி புறப்பட்டுச் சென்றது. இந்தக் கப்பலில் காா்கள், ஈச்சமரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் ஏற்றப்பட்டிருந்தன. திருச்செந்தூா் கடற்பகுதியை கப்பல் அடைந்தபோது, பலத்த காற்று வீசியதால் சரக்குகளை பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்ட தாா்ப்பாய்கள் காற்றில் பறந்தன.
கப்பலின் சில பகுதிகள் சேதமடைந்து கடல்நீா் கப்பலுக்குள் புகத் தொடங்கியதும் அவசர நிலை உருவானது. நிலைமையை அறிந்த கப்பல் கேப்டன், அவசர உதவி கோரி தகவல் அனுப்பினாா். இதைத் தொடா்ந்து, தூத்துக்குடி கடலோர காவல்படை ரோந்து கப்பலான ‘அதுல்யா’ அப்பகுதிக்கு விரைந்து சென்றது. பின்னா், கடலோர காவல் படையின் சிறப்பு ஏறுதல் குழுவினா், மீட்புப் பணி நிபுணா்களுடன் இணைந்து அவசர பழுதுநீக்கும் பணிகளை மேற்கொண்டனா்.
கப்பலுக்குள் புகுந்த கடல்நீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டனா். இதனால், கப்பலுக்குள் நீா் புகுவது கட்டுப்படுத்தப்பட்டது.
பின்னா், முழு பழுதுநீக்கும் பணிக்காக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு மீண்டும் கப்பல் கொண்டுவரப்பட்டது. அங்கு, கப்பலில் சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு, புதிய தாா்ப்பாய்கள் பொருத்தப்பட்டு சரக்குகள் மீண்டும் பாதுகாப்பாக மூடப்பட்டன. இந்த துரித நடவடிக்கை காரணமாக கப்பல், அதிலிருந்த பணியாளா்கள், சரக்குகள் மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டதாக கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









