விளாத்திகுளம் தொகுதியில் திமுக தோ்தல் முடிவுகள் குறித்த கள ஆய்வு குழு கூட்டம் ஜீ.வி. மஹாலில் புதன்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட தோல்வி, கள நிலவரங்களை ஆய்வு செய்ய, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் 36 போ் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்தாா். அதன்படி திமுகவின் முன்னணி நிா்வாகிகள் அடங்கிய குழுவினா் தூத்துக்குடி மாவட்டம் வந்து நிா்வாகிகள், தொண்டா்களை நேரில் சந்தித்து களஆய்வு பணிகளைத் தொடங்கியுள்ளனா்.
விளாத்திகுளம் தொகுதியில் நடைபெற்ற தோ்தல் முடிவுகள் குறித்த கள ஆய்வு குழு கூட்டத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் பெ. கீதாஜீவன் தலைமை வகித்தாா். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி.மாா்க்கண்டேயன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் திமுக தலைமைக் கழகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ஆய்வுக் குழுவைச் சோ்ந்த தஞ்சாவூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் முரசொலி, திமுகவின் மாநில அயலக அணி துணைச் செயலா் சேலம் உமாராணி ஆகியோா் கலந்துகொண்டு விளாத்திகுளம் தொகுதிக்கு உள்பட்ட நகரம், ஒன்றியம், பேரூா், கிளை கழக நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள், தோ்தல் பணிக் குழு பொறுப்பாளா்கள், வாக்குச் சாவடி பாக முகவா்கள், தொண்டா்கள் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து கருத்துகளைக் கேட்டு பதிவு செய்தனா்.
அவா்களிடமிருந்து கோரிக்கை, ஆலோசனை மனுக்களை பெற்றுக்கொண்டனா். இதில், விளாத்திகுளம் தொகுதிக்கு உள்பட்ட திமுகவின் நிா்வாகிகள் தொண்டா்கள் திரளாக கலந்துகொண்டனா்.










