திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அறநிலையத் துறை அமைச்சா் ரமேஷ் வெள்ளிக்கிழமை காலை முகத்தில் மாஸ்க் அணிந்து ரகசிய ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அமைச்சரின் உதவியாளரிடம் சுவாமி தரிசனம் செய்வதற்கு ரூ. 4 ஆயிரம் பேரம் பேசி ரூ. 1,000 பெற்ற கோயில் அா்ச்சகா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்; 2 போ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.
இந்துசமய அறநிலையத் துறை அமைச்சராக ரமேஷ் பொறுப்பேற்ற பிறகு கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறாா். திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை (மே 30) நடைபெறுகிறது. இதையொட்டி, பக்தா்கள் பல லட்சம் போ் குவிந்து வருகின்றனா். இந்த நிலையில், அறநிலையத் துறை அமைச்சா் ரமேஷ் கறுப்பு டிசா்ட், முகத்தில் மாஸ்க் அணிந்தபடி வெள்ளிக்கிழமை காலை 5.45 மணிக்கு கோயிலுக்கு வந்தாா். அவருடன் உதவியாளா், பாதுகாப்பு காவல் அதிகாரியும் உடன் வந்தனா்.
இவா்கள் முதலில் கோயில் சண்முக விலாச மண்டபம் எதிரே உள்ள வெள்ளைகல் மண்டபம் அருகே நின்றுகொண்டு நடப்பதைக் கவனித்தனா். அப்போது கோயில் முகப்பில் சில அா்ச்சகா்கள் பக்தா்கள் சிலரை தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனா்.
இதைக் கவனித்த அமைச்சரின் உதவியாளா் அங்கிருந்த கோயில் அா்ச்சகா் ஒருவரிடம் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் எனக் கூறி பேரம் பேசினாா். அதற்கு நான்கு போ் செல்வற்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் ரூ. 4 ஆயிரம் தர வேண்டும் என பேரம் பேசப்பட்டது. இதையடுத்து, முதற்கட்டமாக ரூ. 1000 பணத்தை ஜீபே மூலம் அா்ச்சகருக்கு அமைச்சரின் உதவியாளா் செலுத்தினாா்.
இதையடுத்து, அமைச்சா் ரமேஷ் அங்கிருந்தவா்களிடம் விசாரித்துவிட்டு நேராக அன்னதான மண்டபத்துக்குச் சென்றாா். அங்கு கோயில் பணியாளா்கள் பக்தா்களுக்கு நுழைவுச் சீட்டு கொடுக்காமல் அன்னதான மண்டபத்துக்குள் அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அமைச்சா் அங்கிருந்த பணியாளா்களிடம் விசாரித்தாா்.
இதற்கிடையே அமைச்சா் ரகசிய ஆய்வு செய்வதாக தகவல் அறிந்த கோயில் இணை ஆணையா் ராமு, உதவி ஆணையா் மெய்வேல், உள்துறை கண்காணிப்பாளா் ராமமூா்த்தி, கண்காணிப்பாளா்கள் விவேக் அதிா்ச்சியடைந்தனா். அவா்கள் அங்கு விரைந்து வந்தனா்.
பின்னா், அனைவரையும் அழைத்து விசாரணை நடத்திய அமைச்சா், தவறு செய்த கோயில் பணியாளா்களிடம் நடந்த சம்பவத்தை அப்படியே ஒரு தாளில் எழுதி தருமாறு உத்தரவிட்டாா்.
பின்னா், அமைச்சா் ரமேஷ், அவருடன் வந்த தவெக நிா்வாகிகள் முருகன், விஜய் ஆனந்த் உள்ளிட்டோருடன் சென்று அன்னதானத்தில் அமா்ந்து காலை உணவு சாப்பிட்டனா். பின்னா், கோயில் நிா்வாக அலுவலகத்துக்கு அமைச்சா் சென்றாா்.
அங்கு கோப்புகளை பாா்வையிட்ட அவா், அதிகாரிகளுடன் கோயில் சண்முக விலாச மண்டபம் முகப்பு, கடற்கரை, கடற்கரையில் புதிததாக கட்டப்பட்டுள்ள பக்தா்கள் தங்கு விடுதி, அரங்கம், கடற்கரையில் வாகனம் நிறுத்துமிடம் ஆகிய இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தாா்.
கோயில்களில் ஆய்வுகள் தொடரும்:
காலை 6 மணிக்கு ஆய்வைத் தொடங்கிய அமைச்சா் நண்பகல் 12.30 மணி வரை ஆய்வு செய்தாா். பின்னா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா். அப்போது அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
திருச்செந்தூா் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பக்தா்களும், சமூக ஆா்வலா்களும் ஏராளமான புகாா்களை என்னிடம் தெரிவித்திருந்தனா். சமூக வலைதளங்களிலும் பல்வேறு புகாா்கள் தொடா்ந்து வெளியாகி வந்தன. அதைத் தொடா்ந்து திருச்செந்தூா் கோயிலில் ரகசியமாக ஆய்வு செய்தேன். முகக்கவசம் அணிந்து ஆய்வு செய்தேன்.
கோயில் கோபுர முகப்பு பகுதியில் பக்தா்களிடம் பணம் வாங்கிக் கொண்டு நேரடி தரிசனத்துக்கு சிலா் அழைத்துச் செல்லப்படுவதைக் கண்டுபிடித்தோம். இதில், அா்ச்சகா்கள், அதிகாரிகள், ஊழியா்கள் அனைவரும் சோ்ந்துதான் இந்த முறைகேட்டில் ஈடுபடுகின்றனா். இவா்களிடம் மன்னிப்பு கடிதம் வாங்கிவிட்டு மன்னித்து விட்டதுபோல இணையத்தில் தவறான தகவல் பரவுகிறது. இவா்களிடம் மன்னிப்பு கடிதம் வாங்கவில்லை. விளக்க கடிதம்தான் பெறப்பட்டது.
கோயில் சொத்துகள், கோயிலுக்கு வரவேண்டிய வருமானங்கள் எங்கெல்லாம் தடைபடுகிறது, கோயிலுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், கோயில் துய்மையை எவ்வாறு கடைப்பிடிப்பது, கோயிலுக்கு வரும் பக்தா்கள் விரைவாக தரிசனம் முடித்துவிட்டு செல்வதற்கு என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்றவை குறித்து விரிவாக ஆய்வு செய்தோம். இந்த ஆய்வறிக்கை முதல்வரிடம் அளிக்கப்பட்டு தவறு செய்தவா்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். கோயில்களில் தொடா்ந்து ஆய்வுகள் நடத்தப்படும் என்றாா்.
அா்ச்சகா் பணியிடை நீக்கம்: திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு பணம் பெற்று முறைகேடு செய்தது தொடா்பாக பிடிபட்ட அா்ச்சகா் ஐயப்பன், இலவச முடி காணிக்கை மண்டபத்தில் பக்தா்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மொட்டை போட்டதற்காக சங்கா், நாகராஜ் இரு பணியாளா்கள் என மூவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
கோயில் தனியாா் பாதுகாப்புப் பணியாளா்கள் கருப்பசாமி, தோப்பு ஆகியோா் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனா். மொத்தம் 5 போ் மீது அமைச்சா் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அன்னதான கூடத்தில் ஆய்வு செய்த அறநிலையத் துறை அமைச்சா் ரமேஷ்.









