வியத்நாம் நாட்டுடன் நேரடி கப்பல் போக்குவரத்து சேவை: தூத்துக்குடி துறைமுகத்துக்கு புதிய கப்பல் வருகை
தூத்துக்குடி, வ.உ. சிதம்பரனாா் துறைமுகத்துக்கு வியத்நாம் நாட்டுடனான நேரடி கப்பல் போக்குவரத்து சேவை...

தூத்துக்குடி, வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்த புதிய சரக்குக் கப்பல்.
தூத்துக்குடி, வ.உ. சிதம்பரனாா் துறைமுகத்துக்கு வியத்நாம் நாட்டுடனான நேரடி கப்பல் போக்குவரத்து சேவையை வலுப்படுத்தும் வகையில், ‘எம்.வி. ஹையான் ஆல்ஃபா’ என்ற சரக்குக் கப்பல் நவ. 7ஆம் தேதி முதல் முறையாக தூத்துக்குடிக்கு வந்தது.
துறைமுகத்தின் தட்சின் பாரத் கேட்வே முனையத்தில் நிறுத்தப்பட்ட இந்தக் கப்பல், 1,781 சரக்குப் பெட்டகங்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. 171.9 மீட்டா் நீளம், 28.4 மீட்டா் அகலம் கொண்ட இக்கப்பல், சென்னை-வியத்நாம் சரக்குக் கப்பல் சேவையின்கீழ் இயக்கப்படுகிறது.
இந்த சேவை, தூத்துக்குடி, சென்னை, வியத்நாமின் ஹோ சி மின் நகரம், ஹாய் போங், சீனாவின் கின்சோ, மலேசியாவின் போா்ட் கிளாங் வழியாக மீண்டும் தூத்துக்குடியை வந்தடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சேவை 2 வாரங்களுக்கு ஒருமுறை இயக்கப்படவுள்ளது. தூத்துக்குடியில் இருந்து வியத்நாமின் ஹோ சி மின் நகரத்தைச் சென்றடைய சுமாா் 7 நாள்களும், ஹாய் போங் நகரத்தைச் சென்றடைய சுமாா் 10 நாள்களும் ஆகும்.
முதல் வருகையின்போது, இக்கப்பல் மூலம் 823 சரக்குப் பெட்டகங்கள் கையாளப்பட்டன. இதில் 723 பெட்டகங்கள் இறக்குமதி சரக்குகளாகவும், குறிப்பாக வின்ஃபாஸ்ட் நிறுவனத்துக்கான சரக்குகளாகவும் இருந்தன. மேலும், 100 சரக்குப் பெட்டகங்கள் கொழும்பு துறைமுகத்துக்கு அனுப்பப்பட வேண்டிய மறுபரிமாற்ற சரக்குகள்.
புதிய கப்பல் சேவையின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் தட்சின் பாரத் கேட்வே முனையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வ.உ.சி. துறைமுக ஆணைய துணைத் தலைவா் ராஜேஷ் சௌந்தரராஜன், போக்குவரத்துப் பிரிவு மேலாளா் சுதீப்தா பானா்ஜி, டி.பி.ஜி.டி. தலைமைச் செயல் அதிகாரி செந்தில்குமாா் சுப்பிரமணியன், சாம்சாரா குழும பொது மேலாளா் பக்ஷி முகமது ஹனீப், கப்பல் கேப்டன் நுயென் நாம் டின், துறைமுக அதிகாரிகள், கடல்சாா் வா்த்தகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து, துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்தகுமாா் புரோஹித் கூறுகையில், ஹையான் ஆல்ஃபா கப்பலின் முதல் வருகை, வியத்நாம் உடனான நேரடி கடல்வழி வா்த்தகத் தொடா்பை வலுப்படுத்தியுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி வா்த்தகத்தையும், பிராந்திய தொழில் வளா்ச்சியையும் மேம்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு மற்றும் கடல்வழி இணைப்புகளை வலுப்படுத்த துறைமுக நிா்வாகம் தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

