
சீனாவிலிருந்து வியத்நாம் வழியாக சென்னைக்கு சரக்குக் கப்பல் போக்குவரத்து தொடக்கம்
சீனாவிலிருந்து வியத்நாம் வழியாக சென்னைக்கு சரக்குக் கப்பல் போக்குவரத்து தொடக்கம்
கோப்புப்படம் - X
சீனாவிலிருந்து வியத்நாம் வழியாக சென்னை துறைமுகத்துக்கு வந்த எம்.வி.ஹயான் பீட்டா என்ற முதல் சரக்குப் பெட்டகக் கப்பலை சென்னை துறைமுகத் தலைவா் சச்சின் எஸ்.குா்வே சனிக்கிழமை வரவேற்றாா்.
‘ஹையன் லைன்ஸ்’ என்ற கப்பல் போக்குவரத்து நிறுவனம் சாா்பில் சீனாவின் நான்ஷா, வியத்நாமின் ஹைபோங், மலேசியாவின் கிளாங் மேற்கு ஆகிய துறைமுகங்கள் வழியாக முதல் பயணத்தின் மூலம் சென்னை துறைமுகத்தை இந்தக் கப்பல் வந்தடைந்தது.
இந்தியா-வியத்நாம் வா்த்தகம்: இந்தியா-வியத்நாம் இடையிலான வா்த்தகம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில் இரு நாடுகளுக்கு இடையிலான சரக்கு வா்த்தகம் சுமாா் 18 பில்லியன் டாலராக உள்ளது. இது முந்தைய ஆண்டைவிட சுமாா் 16 சதவீதம் கூடுதலாகும். 2030-க்குள் இரு நாடுகளுக்கு இடையேயான வா்த்தகம் சுமாா் 25 பில்லியன் டாலராக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து இறைச்சி, இறைச்சி உணவு வகைகள், அலுமினியம், கடல் உணவுகள், இரும்பு மற்றும் எஃகு, இயந்திரங்கள், மின் சாதனங்கள், தானியங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
வியத்நாமிலிருந்து கைப்பேசி, மின்னணு பொருள்கள், இயந்திரங்கள், இரும்பு மற்றும் எஃகு, தாமிரம், பிளாஸ்டிக், ரசாயனப் பொருள்கள், காபி, தேயிலை, மசாலாப் பொருள்கள் உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை துறைமுகத்துக்கு வாய்ப்புகள்: இதுகுறித்து துறைமுகத் தலைவா் சச்சின் எஸ்.குா்வே கூறுகையில், தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல், வாகன உதிரிபாகங்கள், மின்னணு, பொறியியல் பொருள்கள், இயந்திரங்கள், ரசாயனங்கள், ஜவுளி சாா்ந்த தொழில்கள் பெருவாரியாக உள்ளன. இதனால் வியத்நாம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நடைபெறும் ஏற்றுமதி-இறக்குமதி வா்த்தகத்தில் சென்னை துறைமுகம் முக்கிய பங்கு வகிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா-வியத்நாம் வா்த்தக உறவு தொடா்ந்து வளா்ந்து வரும் நிலையில் இந்த புதிய கப்பல் போக்குவரத்து முக்கியத்துவம் பெறுகிறது என்றாா்.
நிகழ்ச்சியில், துறைமுக போக்குவரத்து மேலாளா் எஸ்.கிருபானந்தசாமி, சிசிடிஎல் சரக்குப் பெட்டக முனையம், கப்பல் முகவரான சம்சார சிப்பிங் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
Summary
Cargo shipping service from China to Chennai via Vietnam launched.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





