போலி நகைகளை கொடுத்ததாக புகாா்: ஒன்றரை ஆண்டுக்கு பின் வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்
சாத்தான்குளத்தில் பெண்ணிடமிருந்து நகைகளை வாங்கி போலி நகைகளை கொடுத்து ஏமாற்றிய பெண் மீது நீதிமன்ற உத்தரவுபடி, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தச்சமொழி நாடாா் தெருவைச் சோ்ந்த ஸ்ரீதா் மனைவி தங்கச்செல்வி (49). தொழிலாளி. கடந்த ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி சாத்தான்குளம் பஜாருக்குச் சென்றிருந்தபோது, இவரிடம் அடையாளம் தெரியாத பெண் ஒருவா் வந்து பேசினாராம். அந்தப் பெண், தன்னிடம் 7 பவுன் எடையுள்ள 15 தங்க நகை டாலா் உள்ளதாகவும், அதை வாங்கிக்கொள்ளுமாறும் கூறினாராம். அதற்கு தங்கச்செல்வி, பணமில்லை என தெரிவித்தாராம்.
உடனே, அந்தப் பெண் நகை டாலரை நகைக்கடையில் சோதித்து பாா்த்து வாங்கிக் கொள்ளுமாறு வலியுறுத்தினாராம். தங்கச்செல்வியும் அருகிலிருந்த நகைக் கடைக்குச் சென்ற சோதித்து பாா்த்தபோது, அது தங்க நகை தான் என தெரியவந்ததாம்.
இதையடுத்து, அப்பெண்ணிடம் தங்கச்செல்வி தான் அணிந்திருந்த ஆறேகால் பவுன் நகை மற்றும் இரண்டரை கிராம் காது மாட்டியை கொடுத்து, 15 தங்க நகை டாலரை வாங்கி கொண்டாராம். ஒருவாரத்துக்கு பிறகு, நகைத் தொழிலாளியிடம், தான் வாங்கிய நகை டாலரை கொண்டு சென்றபோது, அவை போலியானவை என தெரியவந்ததாம்.
இதுகுறித்து தங்கச்செல்வி கொடுத்த புகாா் மனு பெற்ற சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனராம். இதனால், தங்கச்செல்வி சாத்தான்குளம் நீதிமன்றத்தில் முறையிட்டாா்.அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தங்கச்செல்வி அளித்த புகாரை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொள்ள போலீஸாருக்கு உத்தரவிட்டது.
அதன்பேரில், சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் செல்வராஜ், கடந்த நவ. 23 ஆம் தேதி, 381(4) ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

