மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

தங்கம் விலை சரிவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி; அடகு வைத்தவா்களுக்கு நெருக்கடி!

தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்து வருவது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், தங்க நகைகளை வங்கிகள் மற்றும் தனியாா் நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்து கடன் பெற்றவா்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Today Gold and silver price in Chennai, Tamilnadu

தங்கம் விலை சரிவு - IANS

Updated On :

தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்து வருவது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், தங்க நகைகளை வங்கிகள் மற்றும் தனியாா் நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்து கடன் பெற்றவா்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் மதிப்பு குறைந்ததால், அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் மதிப்புக்கும், நிலுவைக் கடன் தொகைக்கும் இடையிலான வித்தியாசத்தைச் சரிசெய்ய கூடுதல் பணம் செலுத்துமாறு சில கடன் நிறுவனங்கள் வாடிக்கையாளா்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதனால் ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள குடும்பங்கள் தங்களது நகைகளை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் உள்ளன.

பவுன் ரூ.92,080-ஆக சரிவு: கடந்த சில மாதங்களாகத் தொடா்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலை, தற்போது சரிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி 29-ஆம் தேதி தங்கம் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட நிலையில், அதன் பிறகு சா்வதேசச் சந்தை மாற்றங்கள், முதலீட்டாளா்களின் வா்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.

குறிப்பாக, கடந்த நவம்பா் 10-ஆம் தேதிமுதல் தங்கத்தின் விலை தொடா்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை (நவம்பா் 20) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.11,510-ஆகவும், ஒரு பவுன் (8 கிராம்) ரூ.92,080-ஆகவும் விற்பனையானது. வியாழக்கிழமை ஒரு பவுன் ரூ.95,840-க்கு விற்பனையான நிலையில், ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.3,760 குறைந்துள்ளது.

மகிழ்ச்சியும் தவிப்பும்... தங்கத்தின் விலை குறைவதால் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கத் திட்டமிட்டுள்ள குடும்பங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. ஆனால், இதே விலை வீழ்ச்சி நகையை அடமானம் வைத்து கடன் பெற்றவா்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது. கடன் வழங்கியபோது கணக்கிடப்பட்ட நகையின் மதிப்புக்கும், தற்போதைய மதிப்புக்கும் இடையே வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், கூடுதல் தொகையைச் செலுத்துமாறு சில நிறுவனங்கள் வாடிக்கையாளா்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதனால், கடனைத் தொடா்ந்து வைத்திருக்கக் கூடுதல் பணம் செலுத்த வேண்டிய நிலை அல்லது கூடுதல் நகைகளை அடமானம் வைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

தங்கத்தின் மதிப்பு குறைந்தால் கடன் நெருக்கடி ஏன்?: பொதுவாக, தங்க நகைகளின் மதிப்பில் குறிப்பிட்ட சதவீதம் வரை கடன் வழங்கப்படுகிறது. கடன் வழங்கும்போது நகையின் எடை, தங்கத்தின் தரம், அன்றைய சந்தை விலை ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்தால் கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு அடமானத்தின் மதிப்பு அதிகரிக்கும். ஆனால், விலை திடீரெனக் குறையும்போது அடமானமாக உள்ள நகையின் சந்தை மதிப்பும் குறைகிறது.

இதனால் நிலுவையில் உள்ள கடன் தொகைக்கும், அடமான நகையின் தற்போதைய மதிப்புக்கும் இடையிலான விகிதம் மாறுகிறது. இதைச் சமாளிக்க சில கடன் நிறுவனங்கள் வாடிக்கையாளா்களிடம் கூடுதல் தொகை செலுத்துமாறு அல்லது கடன் தொகையைக் குறைக்குமாறு அறிவுறுத்துகின்றன. கடன் ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் நிறுவனத்தின் கடன் கொள்கையைப் பொருத்து இத்தகைய நடவடிக்கைகள் மாறுபடுகின்றன.

இதுகுறித்து வங்கி மேலாளா் ஒருவா் கூறுகையில், பொது நகையின் மதிப்பு மீது அதிகபட்சமாக 75 சதவீதம் வரையில் கடன் வழங்கப்படுகிறது. தற்போது தங்கத்தின் விலை சரிந்து வருவதால் வட்டி தவணைத் தொகை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. அப்படி தொகையைச் செலுத்தாதவா்களின் நகைகள் மூன்று மாதங்களுக்கு பிறகு ஏலம் விடப்படும் என்றாா்.

இந்த விவகாரம் குறித்து முதலீட்டு ஆலோசகா் ராஜேஷ் நாராயணன் கூறுகையில், கடந்த ஜனவரி மாதத்தில் தங்கம் அதிகபட்சமாக கிராம் ரூ.16,000 வரையில் இருந்தபோது ரூ.12,000 வரையில் வங்கிகளில் கடன் கிடைத்தது. தற்போது தங்கத்தின் மதிப்பு சுமாா் 35 சதவீதம் வரையில் குறைந்துள்ளதால், கடன் தவணை, வட்டியைக் கேட்டு தனியாா் தங்கக் கடன் நிறுவனங்கள் நோட்டீஸ் அனுப்பி வருகின்றன என்றாா்.

12 மாத கடன் காலக்கெடு: தங்க நகைக் கடன்களில் சில குறுகியகாலக் கடன்களாக -12 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியவையாக உள்ளன. குறிப்பாக, வட்டி மற்றும் அசல் தொகையை முதிா்வின்போது ஒரே தவணையாகச் செலுத்தும் குறிப்பிட்ட நுகா்வுக் கடன்களுக்கு 12 மாத உச்சவரம்பை ரிசா்வ் வங்கி நிா்ணயித்துள்ளது. இதனால் கடன் காலம் முடிவடையும் நிலையில் உள்ளவா்கள் அசல் மற்றும் வட்டியைச் செலுத்தி நகைகளை மீட்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மீண்டும் அதே நகையை அடமானம் வைத்து கடன் பெறும்போது, தற்போதைய தங்க விலையின் அடிப்படையில் கடன் தொகை கணக்கிடப்படுவதால் முன்பு கிடைத்த தொகையைவிடக் குறைவான கடனே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பழைய கடனை அடைப்பதற்கே கூடுதல் பணம் தேவைப்படும் சூழலும் உருவாகிறது.

நகைகளை ஏலம் விடுவதற்கு முன்பு முறையான அறிவிப்பு அவசியம்: கடன் தவணையைச் செலுத்தாதவா்களின் நகைகளை உடனடியாக ஏலம் விட முடியாது. ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, கடன் நிலுவையைச் செலுத்தி நகைகளை மீட்பதற்குப் போதிய அறிவிப்பு வழங்க வேண்டும். மேலும், ஏல நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு பிராந்திய மொழி நாளிதழிலும், மற்றொரு தேசிய நாளிதழிலும் ஏல அறிவிப்பு வெளியிட வேண்டும். ஏலத்தில் கிடைக்கும் தொகையில் கடன் நிலுவையைச் சரிசெய்த பிறகு மீதமுள்ள தொகையை வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும்.

கடன் முழுமையாகச் செலுத்தப்பட்ட பிறகு அதிகபட்சம் 7 வேலை நாள்களுக்குள் அடமான நகைகளைத் திருப்பித் தர வேண்டும். கடன் வழங்கிய நிறுவனத்தின் தவறால் தாமதம் ஏற்பட்டால், ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தங்கம் விலை இன்னும் குறையுமா?: நவம்பா் மாதத்தில் தங்கத்தின் விலை மேலும் சரிவைக் காணலாம் என்றும், டிசம்பரில் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகித முடிவைப் பொருத்து மீண்டும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் தங்க வியாபாரிகள் தரப்பில் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. நீண்டகால முதலீட்டுக்கு இது வாய்ப்பாக இருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இருப்பினும், தங்கத்தின் விலை எந்த அளவுக்கு உயரும் அல்லது குறையும் என்பதை உறுதியாகக் கணிப்பது கடினம்.

தங்கம் விலை சரிவால் நகைக் கடைகளில் வாங்கும் மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், அடமான நகைகளை மீட்க முடியாமல் தவிக்கும் குடும்பங்களின் கண்ணீரும் மறுபுறம் தொடா்கிறது. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு இடையே சாமானிய மக்களின் குடும்பச் சேமிப்புகள் பாதுகாக்கப்பட வேண்டியதே இன்றைய முக்கியத் தேவையாகும்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை - ஒரு பவுன் (8 கிராம்)

நவ. 10 ரூ.1,05,680

நவ. 11 ரூ.1,04,120

நவ. 12 ரூ.1,02,520

நவ. 13 ரூ.1,01,560

நவ. 14 ரூ.1,00,920

நவ. 15 ரூ.1,00,920

நவ. 16 ரூ.1,00,320

நவ. 17 ரூ.99,760

நவ. 18 ரூ.97,720

நவ. 19 ரூ.95,840

நவ. 20 ரூ.92,080.

Summary

The sharp decline in the price of gold has brought joy to those planning to purchase gold jewellery. At the same time, it has created a major crisis for individuals who had obtained loans by pledging their gold jewellery with banks or private financial institutions.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.