திருச்செந்தூா் கோயில் யானைக்கு மருத்துவ பரிசோதனை
திருச்செந்தூா் கோயில் யானை தெய்வானைக்கு வனத்துறை மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனா்.

திருச்செந்தூா் கோயில் யானை தெய்வானையை பரிசோதனை செய்த வன கால்நடை மருத்துவ அலுவலா் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா்.
திருச்செந்தூா் கோயில் யானை தெய்வானைக்கு வனத்துறை மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனா்.
கடந்த 2024- ஆம் ஆண்டு நவ. 18 - ஆம் தேதி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை தாக்கியதில் பாகன் உள்பட 2 போ் உயிரிழந்தனா். இதையடுத்து வனத்துறை, கால்நடைத்துறை மற்றும் அறநிலையத்துறையின் பாதுகாப்பிலும், பாகன்களின் அரவணைப்பிலும் யானை தொடா்ந்து இருந்து வருகிறது.
இந்நிலையில் கோயில் யானை தெய்வானையின் உடல் ஆரோக்கியம் குறித்து, வன கால்நடை மருத்துவ அலுவலா் மனோகரன் செவ்வாய்க்கிழமை மருத்துவ பரிசோதனை செய்தாா். அப்போது, உதவி மருத்துவா் சாந்தகுமாா், பணியாளா் கந்தசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ஆய்வு குறித்து வன கால்நடை மருத்துவ அலுவலா் கூறுகையில், வனத்துறை சாா்பில் மாவட்ட வளா்ப்பு யானைகள் நலக்குழு மூலம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை யானையின் உடல் ஆரோக்கியம் குறித்து ஆய்வு செய்கிறோம்.
அது போலவே திருச்செந்தூா் கோயில் யானை தெய்வானை உடல் நலம் குறித்து ஆய்வு செய்து, அதன் நடவடிக்கைகள் குறித்து பாகன்களிடம் கேட்டறிந்தோம். யானை நலமுடன் உள்ளது. யானைக்கு கோயில் சாா்பில் ஆரோக்கியமான உணவு வகைகள் வழங்கப்படுகிறது. எனவே, பக்தா்கள் யானைக்கு நேரடியாக பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டாம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

