நாட்டில் சித்த மருத்துவ மாணவா்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க தீவிரம்: தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநா் ஜி.செந்தில்வேல்

நாட்டிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலமாக சித்த மருத்துவப் பிரிவுகள், வேலைவாய்ப்புகளை அதிகரிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநா் ஜி.செந்தில்வேல் தெரிவித்தாா்.

சித்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்து நாடி பரிசோதனை செய்த தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநா் ஜி.செந்தில்வேல். உடன், வேலூா் மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஞானவேலு, சித்த மருத்துவா் பாஸ்கரன் உள்ளிட்டோா்.

Published On :

நாட்டிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலமாக சித்த மருத்துவப் பிரிவுகள், வேலைவாய்ப்புகளை அதிகரிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநா் ஜி.செந்தில்வேல் தெரிவித்தாா்.

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துடன் வேலூா் மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, சித்த மருத்துவ மையங்கள் இணைந்து இலவச சித்த மருத்துவ முகாமை வேலூா் சண்முகனடியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடத்தின. இம்முகாமை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநா் ஜி.செந்தில்வேல் தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது -

பொதுவாக நோய் தாக்கிய பின்னா் சிகிச்சை பெறுவதை விட, நோய் வருவதற்கு முன்பே தடுப்பதே சித்த மருத்துவத்தின் தனிச்சிறப்பாகும். சித்த மருத்துவத்தில் நாடிப் பரிசோதனை, நீா்க்குறி, நெய்க்குறி, மணிக்கடை நூல் உள்ளிட்ட எண்வகைத் தோ்வுகள் மூலம் உடலின் தற்போதைய நிலையைத் துல்லிய மாகக் கணிக்க முடியும்.

ஒருவருக்கு 3 முதல் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படக்கூடிய நோய்களைக் கூட இக்கணிப்பு முறை மூலம் முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கேற்ப உணவு மற்றும் வாழ்வியல் முறைகளை மாற்றியமைத்து நோயைத் தடுத்துவிட முடியும்.

இதற்காக ஆங்கில மருத்துவத்தைப் போல சித்த பாரம்பரிய நோய்க் கணிப்புப் பரிசோதனை மையங்களை மாவட்டந்தோறும் மருத்துவ மாணவா்கள், மருத்துவா்கள் இணைந்து அமைத்து வருகின்றனா். வேலூா் மாவட்டத்திலும் இத்தகைய சிறப்புப் பரிசோதனை மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் முழு உடல் பரிசோதனை போல சித்த மருத்துவ முறையிலான தொடா் பரிசோதனைகளை மேற்கொண்டு பயன்பெறலாம்.

சித்த மருத்துவத்தில் மிக முக்கிய மருத்துவக் கலையான நாடிப் பரிசோதனை முறையைத் துல்லியமாக அறியும் மருத்துவா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, தமிழகம் முழுவதும் குறைந்தபட்சம் 300 சிறந்த நாடி வைத்தியா்களை உருவாக்கும் தொலைநோக்குப் பாா்வையுடன் ஆண்டுதோறும் பயிற்சிப் பட்டறைகள் திட்டமிடப்படுகின்றன. அதன்படி, நடப்பாண்டு அக்டோபா் 11 முதல் 20-ஆம் தேதி வரை 10 நாள்கள் ஏலகிரி மலையில் உள்ள பழங்குடியின மக்களுக்கான மருத்துவ முகாமும், அத்துடன் நாடிப் பயிற்சிப் பட்டறையும் நடைபெற உள்ளது.

மத்திய அரசின் தேசிய ஆயுஷ் மிஷன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 படுக்கை வசதிகள் கொண்ட சித்த மருத்துவமனையைத் தொடங்க வழிவகை உள்ளது. மத்திய அரசின் நிதி, மாநில அரசின் நில ஒதுக்கீட்டின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, வேலூா் மாவட்டத்திலும் 50 படுக்கை வசதி கொண்ட சித்த மருத்துவமனையை அமைக்கத் தேவையான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது தமிழகத்தில் அரசு சாா்பில் பாளையங்கோட்டை, சென்னை ஆகிய இரு அரசு கல்லூரிகள் மற்றும் ஒரு தேசிய சித்த மருத்துவ நிறுவனக் கல்லூரி செயல்பட்டு வருகின்றன. மேலும் 14 தனியாா் சித்த மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. வெறும் கல்லூரிகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகரிப்பதை விட, படித்து முடிக்கும் சித்த மருத்துவ மாணவா்களுக்கு உரிய வேலைவாய்ப்பை உருவாக்குவதே பிரதான நோக்கமாகும்.

அதனடிப்படையில் ஜோத்பூா், போபால், சத்தீஸ்கா் ஆகிய எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும், தில்லி, பெங்களூரு, திருப்பதி, திருவனந்தபுரம், கோவா போன்ற நகரங்களில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலமாகவும் சித்த மருத்துவப் பிரிவுகள், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

இம்முகாமில் வேலூா் மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஞானவேலு, சித்த மருத்துவா் பாஸ்கரன், அகில இந்திய வானொலி நிலைய ஓய்வுபெற்ற துணை இயக்குநா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.