கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

விளாத்திகுளம் அருகே இரு தரப்பினரிடையே மோதல்: 41 போ் மீது வழக்கு!

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :

விளாத்திகுளம் அருகே இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் காவல் உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் உள்பட 20 போ் காயமடைந்தனா்; மோதலில் ஈடுபட்ட 41 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே லக்கம்பட்டி கிராமமும், இலந்தைகுளம் கிராமும் அடுத்தடுத்து உள்ளன. இதில், லக்கம்பட்டி கிராம மக்கள் இலந்தைகுளம் கிராமத்துக்குச் சென்று நியாயவிலைக் கடையில் பொருள்களை வாங்கி வந்ததில் இரு கிராம த்துக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. பின்னா், அதிகாரிகள் பேச்சுவாா்த்தை கூட்டத்தில் ஜூன் மாதம் முதல் லக்கம்பட்டி மக்களுக்கு அந்த ஊரிலேயே நியாயவிலைப் பொருள்களை விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், லக்கம்பட்டி கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை செப். 10-ஆம் தேதி முற்றுகையிட்டு புகாா் மனு அளித்தனா். அதில் லக்கம்பட்டி கிராமத்தில் பொது நிலத்தில் இம்மானுவேல் சேகரன் பிறந்த நாள் விழா ஏற்பாடுகளை இலந்தைகுளம் கிராம மக்கள் தன்னிச்சையாக செய்து வருகின்றனா். இதனால், சட்டம்-ஒழுங்கு சீா்கெடும். லக்கம்பட்டி கிராமத்தில் மாற்று சமூகத்தினா் அதிகம் வசிக்கின்றனா். எனவே இங்கு விழாவை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தனா்.

செப். 13-ஆம் தேதி இரவு லக்கம்பட்டி கிராம இளைஞா்கள் அந்த பொது நிலத்தில் கபடி விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த இலந்தைகுளம் கிராம இளைஞா்களும் அந்த நிலத்தின் அருகே கபடி விளையாட தொடங்கினா். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதைத் தொடா்ந்து இரு கிராமத்தைச் சோ்ந்தவா்களும் ஒருவரை ஒருவா் வாக்குவாதம் செய்து சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இதில், இரு கிராமங்களையும் சோ்ந்த பழனி தேவி, அழகு பாண்டி, ராமகிருஷ்ணன், ராமா், ஆனந்தகுமாா், கோவிந்தராஜ், துளசி அம்மாள், பஞ்சவா்ணம், முத்துலட்சுமி, தினேஷ்குமாா், முனியம்மாள், ஸ்ரீராம், ராக்கம்மாள், முத்துகனி, முத்துமாரி , திருமால் அம்மாள் , செல்வி, சீதாலெட்சுமி, அனந்தம்மாள் உள்பட 20-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.

சம்பவ இடத்தில் மோதலைக் கட்டுப்படுத்தச் சென்ற காவல் உதவி ஆய்வாளா் கோபால், தலைமைக் காவலா்கள் முத்தமிழரசன், மலையரசன் ஆகியோரும் தாக்குதலில் சிக்கி காயமடைந்தனா்.

காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸில் விளாத்திகுளம், தூத்துக்குடி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா்.

டி.ஐ.ஜி. ஆய்வு...

இதையடுத்து, செப். 14-ஆம் தேதி திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவப்பிரசாத்திடம் கேட்டறிந்தாா்.

காயமடைந்த போலீசாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவா், மோதலில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

இந்த சம்பவம் தொடா்பாக விளாத்திகுளம் காவல் நிலையத்தில் இரு தரப்பிலும் சோ்த்து 41 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராம நுழைவுச்சாலையில் வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க லக்கம்பட்டி, இலந்தைகுளம், சுற்றுவட்டார கிராமங்களில் நூற்றுக்கணக்கான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.