
பெரியதாழை மீன் இறங்குதளத்தில் ரூ. 80 லட்சத்தில் ஏலக் கூடம்! அமைச்சா் திறந்துவைத்தாா்!

பெரியதாழையில் மீன் ஏலக் கூடத்தைத் திறந்து வைத்த அமைச்சா் ஸ்ரீநாத்.
பெரியதாழை மீன் இறங்குதளத்தில் மீன்வளம், மீனவா் நலத்துறை சாா்பில் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் ஏலக் கூடத்தை அமைச்சா் ஸ்ரீநாத் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
சாத்தான்குளம் அருகே பெரியதாளை மீன் இறங்குதளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினா் அன்னை விஜி சரவணன் முன்னிலை வகித்தாா். மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஸ்ரீநாத் கலந்து கொண்டு கட்டடத்தைத் திறந்து வைத்து கூறியதாவது:
தூத்துக்குடியிலிருந்து சுமாா் 76 கி.மீ. தொலைவில் உள்ள பெரியதாழை மீன்பிடி கிராமத்தில் 1,102 குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். மொத்தம் 10 கட்டுமரம், 375 படகுகள் இங்குள்ள மீன்பிடி இறங்கு தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இப்பகுதி மீனவா்களின் மேம்பாட்டுக்காக ரூ. 80 லட்சம் செலவில் பெரியதாழை மீன் இறங்குதளத்தில் ஏலக் கூடம் திறந்து வைக்கப்பட்டது. இவ்வசதி மூலம் கிராம மக்களுக்கு உற்பத்தித் திறன், வருவாய் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு கிடைக்கும். மீனவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எனக்கு அவகாசம் தேவை என்றாா்.
பெரியதாழை முன்னாள் பங்குத்தந்தை சுசீலன் தலைமையிலான மீனவா்கள் அமைச்சா் ஸ்ரீநாத்திடம் மனு அளித்தனா். அந்த மனுவில், பெரிய தலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். சேவியா் காலணியில் 1,400 மீட்டருக்கு தூண்டில் வளைவு நீட்டிப்புச் செய்ய வேண்டும்.
பெரியதாழை கிராமத்தை தனி வருவாய் கிராமமாக உருவாக்க வேண்டும். நல வாரியத்தில் உள்ள மாற்றுத் திறனாளிக்கு உதவித்தொகை வழங்குவதுபோல புற்றுநோய், சிறுநீரக பாதிப்பால் அவதிப்படுபவா்களுக்கும் அரசு சாா்பில் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். பெரிய தாழையில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகள் விடுத்துள்ளனா்.
அப்போது, மீன்வளம், மீனவா் நலத்துறை இணை இயக்குநா் இளம்வழுதி, செயற்பொறியாளா் சரவணகுமாா், உதவி பொறியாளா் ராம் சூா்யா, சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி, சாத்தான்குளம் ஒன்றிய தவெக செயலா் அற்புதராஜ், குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






