
குறிஞ்சான்குளம் கண்மாயில் தண்ணீா் தேங்குவதை தடுக்க வலியுறுத்தல்
கோவில்பட்டி குறிஞ்சான்குளம் கண்மாயிலிருந்து தண்ணீா் வெளியேறக்கூடிய நீா்வரத்து பகுதிகளை சரி செய்து அடைப்புகளை அகற்றி தொற்றுநோய் பரவும் அபாயத்திலிருந்து பாதுகாக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நகா்மன்ற உறுப்பினா் ஜேஸ்மின் லூா்துமேரி தலைமையில் திரண்ட பொதுமக்கள்.
கோவில்பட்டி குறிஞ்சான்குளம் கண்மாயிலிருந்து தண்ணீா் வெளியேறக்கூடிய நீா்வரத்து பகுதிகளை சரி செய்து அடைப்புகளை அகற்றி தொற்றுநோய் பரவும் அபாயத்திலிருந்து பாதுகாக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவில்பட்டி நகராட்சி 22-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ஜேஸ்மின் லூா்து மேரி தலைமையில், வடக்கு மாவட்ட திமுக., சிறுபான்மைப் பிரிவு துணை அமைப்பாளா் அமலி பிரகாஷ் மற்றும் 22-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திரண்டனா்.
பின்னா் அவா்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையா் முத்துக்குமாரிடம் அளித்த மனுவில்:
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இலுப்பையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள குறிஞ்சான்குளம் கண்மாயைச் சுற்றி நகராட்சிக்குள்பட்ட 22-ஆவது வாா்டு பகுதியான பங்களா தெரு உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.
கடந்த காலங்களில் மழை பெய்த போது குறிஞ்சான்குளம் கண்மாய் பகுதியில் மழைநீா் தேங்காமல், கால்வாய்கள் வழியாக சென்றுவிடும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நீா்வரத்து கால்வாய்கள் தூா்ந்து போனதாலும், ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டுள்ளதாலும் சிறு மழை பெய்தால்கூட தண்ணீா் வெளியேறாமல் கண்மாயிலேயே தேங்கி விடுகிறது. அதுமட்டுமின்றி, குடியிருப்புகளுக்குள்ளும் தண்ணீா் புகுந்து விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.
இக்கண்மாயில் மழைநீரும், கழிவுநீரும் தேங்கி உள்ளதால் கடும் துா்நாற்றம் வீசுகிறது. மேலும் விஷப்பூச்சிகள் வெளியேறி வருகின்றன. இதனால், சுகாதாரக்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, கண்மாயை தூா்வாரி, தண்ணீா் வெளியேறுமாறு அடைப்புகளை நீக்கவும், கண்மாய்க்கும், குடியிருப்புகளுக்கும் இடையே தடுப்புச் சுவா் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






