
தமிழ்நாடு விவசாயிகள் சங்க 31-ஆவது மாநில மாநாடு நிறைவு
தூத்துக்குடியில் 3 நாள்கள் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31-ஆவது மாநில மாநாடு செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.

மாநாட்டில் பேசிய முன்னாள் எம்பியும், சங்க அகில இந்திய துணைத் தலைவருமான ஹன்னன்முல்லா.
தூத்துக்குடியில் 3 நாள்கள் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31-ஆவது மாநில மாநாடு செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.
செப். 27ஆம் தேதி பேரணி, பொதுக்கூட்டத்துடன் தொடங்கி, பிரதிநிதிகள் மாநாடு செப். 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நிறைவு நாள் மாநாட்டில் விவசாயிகள் சங்க அகில இந்திய துணைத் தலைவா் பெ. சண்முகம், விவசாயிகள் சங்கத்தின் கேரள மாநிலச் செயலா் வல்சன்பனொலி, கா்நாடக மாநில விவசாயிகள் சங்கச் செயலா் பசவராஜ், சிஐடியூ மாவட்டப் பொருளாளா் எஸ். ராஜேந்திரன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலா் வீ. அமிா்தலிங்கம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு உள்ளிட்ட 9 ஊராட்சிக்குள்பட்ட 98 கிராமங்களில் 100 ஆண்டு காலமாக வசித்து வரும் பழங்குடி, விவசாய குடும்பங்களை வெளியேற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை நிறுத்தி 2006 வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நிலப்பட்டா, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு, வைப்பாறு இணைப்பு திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணியை தொடங்கவேண்டும். செண்பகவல்லி தடுப்பணை கால்வாயை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னாள் எம்பியும், சங்க அகில இந்திய துணைத் தலைவருமான ஹன்னன்முல்லா நிறைவுரையாற்றினாா். வரவேற்புக் குழுச் செயலா் பா. புவிராஜ் நன்றி கூறினாா்.
பின்னா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலா் சாமிநடராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாஜக அரசு கடைப்பிடித்து இருக்கும் வேளாண் விரோத கொள்கையால் தமிழகத்தில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். தவெக அரசு தோ்தல் வாக்குறுதிப்படி, அக். 14ஆம் தேதிக்குள் கடன் தள்ளுபடி செய்யவில்லை என்றால் அனைத்து விவசாயிகளையும் திரட்டி போராட்டம் நடத்துவது என மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பரந்தூா் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்ததை வரவேற்கிறோம். விவசாயிகளிடம் அந்த இடங்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும். நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை அளிப்பது போன்று நவதானிய பொருள்கள் மட்டுமன்றி மரவள்ளிக்கிழங்கு, மாங்காய், வாழை உள்ளிட்ட பொருள்களுக்கும் மாநில அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






