பச்சமலையில் இன்று தொடங்குகிறது திருச்சியில் 700 மாடுகளுக்கு நவீன செயற்கைக் கருவூட்டல்

    திருச்சி, ஆக. 28: கால்நடைப் பராமரிப்புத் துறை மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில், திருச்சி மாவட்டத்தில் 700 மாடுகளுக்கு நவீன முறையிலான செயற்கைக் கருவூட்டல் திட்டம் முதல் முறை
Updated on
2 min read

  திருச்சி, ஆக. 28: கால்நடைப் பராமரிப்புத் துறை மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில், திருச்சி மாவட்டத்தில் 700 மாடுகளுக்கு நவீன முறையிலான செயற்கைக் கருவூட்டல் திட்டம் முதல் முறையாகத் தொடங்கப்படுகிறது.

 குறைந்து வரும் நாட்டு மாடுகள் மற்றும் எருமை மாடுகளின் எண்ணிக்கையை அடுத்து, மாநிலம் முழுவதும் 15,000 மாடுகளுக்கு தேசிய வேளாண்மை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், இந்த நவீன செயற்கைக் கருவூட்டல் செய்யப்படுகிறது.

 திருச்சி மாவட்டத்தில் துறையூர் அருகேயுள்ள பச்சமலை டாப்செங்காட்டுப்பட்டியில் இதற்கான தொடக்க விழா சனிக்கிழமை காலை நடைபெறவுள்ளது.

 எப்படி நவீன கருவூட்டல்?

 கருத்தரித்தலில் தேக்கமுள்ள, குறைபாடுள்ள மாடுகளைத் தேர்வு செய்து முதலில் அவற்றுக்கு குடல்புழு நீக்கம் செய்துவைக்கப்படுகிறது.

 இதைத் தொடர்ந்து 30 நாள்களுக்கு தாதுஉப்புக் கலவை, தீவணத்துடன் கலந்து இந்த மாடுகளுக்கு அளிக்கப்படுகிறது.

 சரியாக 31-ம் நாள் கருமுட்டைகளை வளர்த்து மேம்படுத்தும் "சிடார்' (இஐஈத) என்ற கருவி பசு, எருமை மாடுகளுக்கு பொருத்தப்படுகிறது.

 "சிடார்' பொருத்தப்பட்டபிறகு 8-வது நாள் ஹார்மோன் ஊசி போடப்படும். அடுத்த நாள் "சிடார்' கருவி அகற்றப்படும். ஹார்மோன் ஊசி போடப்பட்ட 72 மணி நேரத்தில் ஒரு முறையும், 96 மணி நேரத்தில் ஒரு முறையும் செயற்கை கருவூட்டல் செய்துவைக்கப்படும்.

 இவையனைத்தும் சரியாக 285 நாள்களில் கன்று ஈனும். இந்த நவீன முறையில் 100 சதம் கருத்தரிக்கும் என்று கால்நடை மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

 மதிப்பு எவ்வளவு?

 வழக்கமாக செயற்கைக் கருவூட்டல் மட்டும்தான் கால்நடை மருந்தகங்களில் செய்துவைக்கப்படும். நவீன முறையில் மேற்கொள்ளப்படும் இந்தக் கருவூட்டலில் ஒரு மாட்டுக்கு தலா ரூ. 955 வரை அரசால் செலவிடப்படுவதாக கால்நடை மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 அதாவது, சிடார் கருவி மட்டும் ரூ. 650, ஹார்மோன் ஊசி ரூ. 150, செயற்கைக் கருவூட்டலுக்கு தலா ரூ. 15, குடல்புழு நீக்கம் மற்றும் தாது உப்பு வழங்கல் ரூ. 125.

 மாநிலம் முழுவதும் இந்தத் திட்டத்தில் 15,000 மாடுகளுக்கு நவீன கருத்தரிப்பு மேற்கொள்ள ரூ. 2 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 கால்நடை மருத்துவத் துறை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் ஆவின் ஆகியவை இந்தப் பணியை தனித்தனியே மேற்கொள்கின்றன.

 திருச்சி மாவட்டத்தில்...

 திருச்சி மாவட்டத்தில் இத்திட்டம் குறித்து கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் எம். ராஜேந்திரன் கூறியது:

 ""திருச்சி மாவட்டத்திலுள்ள திருச்சி மற்றும் முசிறி கோட்டங்கள் மூலம் 250 மாடுகளுக்கும், பல்கலைக்கழகத்தின் முயற்சியில் 150 மாடுகளுக்கும், ஆவின் முயற்சியில் 300 மாடுகளுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

 பச்சமலை டாப் செங்காட்டுப்பட்டியில் 30 மாடுகள் முதலில் சனிக்கிழமை தேர்வு செய்யப்படவுள்ளன. அதைத் தொடர்ந்து இந்த நிதியாண்டுக்குள் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கால்நடை மருத்துவமனைகள் மூலம் 400 மாடுகளுக்கும் இத்திட்டம் செயல்படுத்தி முடிக்கப்படும்.

 எனவே, இத்திட்டத்தில் சரியான வகையில் பயனடைந்து கொள்ள மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்'' என்றார் ராஜேந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com