ஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

திருவாரூரில் ரூ.10.85 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

திருவாரூர், நவ. 4:   திருவாரூரில் ரூ. 10.85 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகக் கட்டடங்களுக்கு சனிக்கிழமை (நவ. 7) அடிக்கல் நாட்டப்படுகிறது.   1.1.1997-ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட

Updated On :20 செப்டம்பர் 2012, 2:58 pm

திருவாரூர், நவ. 4:   திருவாரூரில் ரூ. 10.85 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகக் கட்டடங்களுக்கு சனிக்கிழமை (நவ. 7) அடிக்கல் நாட்டப்படுகிறது.

  1.1.1997-ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, திருவாரூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அதன் பின்னர், திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.

  ஆனால், மாவட்ட நீதிமன்றம் நாகப்பட்டினத்திலேயே செயல்பட்டு வந்தது. இந்நிலையில், திருவாரூரில் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டுமென திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள், பொதுமக்கள் கோரி வந்தனர்.

  2007-ம் ஆண்டில் மாவட்ட நீதிமன்றம் அமைக்க அரசு ஒப்புக்கொண்ட நிலையில், அதற்கான வசதிகளுடன் கூடிய இடத்தை தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

  இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் திருவாரூர் தெற்கு வீதியில் செயல்பட்டு வந்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் வளாகத்தில் தாற்காலிகமாக மாவட்ட நீதிமன்றம் செயல்பட ஏதுவாக, அந்த அலுவலகத்தை தஞ்சாவூர் சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்கு மாற்றித் தர ஏற்பாடு செய்தார்.

  பின்னர், மாவட்ட, அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றை (தெற்கு வீதியில்) அப்போதைய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.கே. கங்குலி 20.09.2008 அன்று தொடக்கிவைத்தார்.

  தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க திருவாரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஆட்சியர் அலுவலகத்துக்கு பின்புறம் ஏறத்தாழ 13 ஏக்கர் நிலத்தை நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் ஒப்புக் கொண்டது.

  இதனடிப்படையில், இந்த இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட தமிழக அரசு 28.08.2009 அன்று அனுமதியளித்து அரசாணை வெளியிட்டது.

  இதன்படி, இந்த இடத்தில் ரூ.9.57 கோடியில் 4,805 சதுர மீட்டர் பரப்பளவில் 3 தளங்கள் கொண்ட மாவட்ட நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட 5 நீதிமன்றங்கள் அமையவுள்ளன. இதே இடத்தில் ரூ.1.28 கோடியில் ஏறத்தாழ 740 சதுர மீட்டர் பரப்பளவில் மாவட்ட நீதிபதி மற்றும் இதர நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்ட தோராய மதிப்பீடுகளை பொதுப் பணித் துறையின் கட்டடக் கட்டுமானப் பிரிவு தயாரித்துள்ளது.

  இதற்கு நீதித் துறை அளித்த அனுமதியின் அடிப்படையில், இக் கட்டடங்கள் கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டு விழா திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

  விழாவுக்கு தமிழக சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல். கோகலே இந்தக் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

  தற்போது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன. ஆட்சியர் அலுவலக விரிவாக்கக் கட்டடத்தில்தான் தாற்காலிகமாக மத்தியப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.   இந்நிலையில், வருவாய், காவல் துறை, நீதித் துறை மற்றம் மருத்துவக் கல்லூரி ஆகிய அனைத்தும் அருகருகே அமையும் போது மக்களுக்கும், அலுவலர்களுக்கும் பயனுள்ளதாக இருக்குமென மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.