திருச்சி, நவ. 11: திருச்சி மாநகரில் சிக்குன் குனியா போன்ற அறிகுறிகளுடன் கூடிய மர்மக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இவை "சிக்குன்- குனியா' இல்லை என மறுக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகள், மழைக்கு வரும் சாதாரண வைரஸ் காய்ச்சல் என்றளவில் ஒப்புக் கொள்கின்றனர்.
திருச்சி மாநகரில் மழை பெய்து ஓய்ந்து இரு நாள்களாகிவிட்டன. இரவு நேரத்தில் மட்டும் ஆங்காங்கே மழைப் பொழிவு இருக்கிறது.
இந்த நிலையில், மாநகரில் உறையூர், கருமண்டபம், பெரிய மிளகுப்பாறை போன்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு மர்மக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.
இந்தக் காய்ச்சல் தொற்றுள்ள பலருக்கும் "சிக்குன்- குனியா'வுக்கான அறிகுறிகளும் தென்படுவது மக்களை அச்சத்துக்குள்ளாக்கி உள்ளது.
உடல் முழுவதும் குறிப்பாக கால்-கை மூட்டுகளில் கடுமையான வலியுடன் கூடியதாக இந்தக் காய்ச்சல் இருக்கிறது. மேலும், "இவ்வாறு இருக்கிறது' எனக் குறிப்பிட முடியாத அளவுக்கு தலைக்குள் வலியுடன் கூடிய சுமையும் ஏற்படுகிறது.
இந்த அறிகுறிகளுடன் காய்ச்சல் ஏற்பட்டுள்ள பெரும்பாலானோர் சித்தா, ஹோமியோ போன்ற மருத்துவ முறைகளையே நாடுகின்றனர்.
அதேபோல, ஒவ்வொரு தெருவிலும் பெருகிப் போய் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் ஆரம்ப நிலையிலான சிகிச்சையைப் பெற்றுக் கொண்டு, குறிப்பிட்ட சில மாத்திரைகளை அதிகளவில் வீடுகளுக்கு வாங்கிச் சென்று வைத்துக் கொள்கின்றனர்.
இவற்றால், அரசு மருத்துவமனைகளில் இந்த மர்மக் காய்ச்சல் தொடர்பான எந்தப் பதிவும் இருக்க வாய்ப்பில்லை. அரசு மருத்துவமனைகளின் பதிவைச் சார்ந்தே இருக்க வேண்டிய நிலையிலுள்ள அதிகாரிகளும் "எந்தக் காய்ச்சலும் இல்லை' என்றே அறிவித்து வருகின்றனர்.
கொசு ஒழிப்பில் தொய்வு: கடந்த முறை சிக்குன்- குனியா, டெங்கு போன்ற நோய்ப் பரவல் தென்பட்டபோது, மாவட்ட சுகாதாரத் துறையுடன் இணைந்து மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டது.
வீடு வீடாக சுகாதாரப் பணியாளர்கள் நேரில் சென்று, தேங்கியிருந்த தண்ணீரை கீழே தெளித்து விட்டதும், பாத்திரங்களில் சேகரித்து வைத்திருந்த தண்ணீரில் "அபேட்' மருந்தைக் கலக்கி வந்ததும் அனைவரும் நேரில் கண்ட நிகழ்வுகள்.
ஆனால், இந்த முறை இதுபோன்ற எந்த சிறப்பு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்கின்றனர் பொதுமக்கள். ஒவ்வொரு வார்டு வாரியாக கொசு மருந்தடிக்கும் முகாம்களின் தேதி வாரியான பட்டியல் அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதேயன்றி, எந்தப் பகுதியிலும் திட்டமிட்டவாறு மருந்தடிக்கப்படவில்லை என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மாநகரில் பரவி வரும் காய்ச்சலின் பெயர் என்ன? அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த விளக்கங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.