பாபநாசம், ஆக. 5: பாரம்பரியமிக்க வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டதும், பல சைவ, வைஷ்ணவ ஆலயங்களை தன்னகத்தே கொண்டதுமான பாபநாசம் நகரை சுற்றுலா மையமாக அரசு அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்தப் பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் நகரை மையமாகக் கொண்டு காவிரி ஆற்றின் தென்கரையிலும், வடகரையிலும் பல சிறப்பு மிக்க ஆலயங்கள் உள்ளன.
அவற்றுள் 108 சிவாலயம் எனப் போற்றப்படும் ஸ்ரீ பர்வத வர்தினி உடனுறை ஸ்ரீ ராமலிங்க சுவாமி (பாபநாசம்), ஸ்ரீ கர்பரட்சாம்பிகை சமேத ஸ்ரீ முல்லை வனநாதர் (திருக்கருகாவூர்), கோயிலின் வெளிப் பிரகாரத்தில் ஆசியாவின் மிகப் பெரிய, முற்றிலும் செங்கல்களால் கட்டப்பட்ட நாயக்க மன்னர்கள் காலத்து நெல் களஞ்சியத்தை கொண்ட ஸ்ரீ தவள வெண்ணகையாள் சமேத ஸ்ரீ பாலைவனநாதர் (திருப்பாலைத்துறை), நாள்தோறும் 5 முறை நிறம் மாறும் மூலவர் ஸ்ரீ கிரிசுந்தரி உடனுறை ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் (திருநல்லூர்), திருமால் மச்சாவதாரத்தில் வழிபட்ட ஸ்ரீ மச்ச புரீஸ்வரர் கோயில் (தேவராயன்பேட்டை), ஸ்ரீ சப்த மாதர்கள் வழிபட்ட, சப்தஸ்தான விழா நடைபெறும் ஏழூர் சிவத்தலங்கள், ஸ்ரீ ராஜ கோபாலர், ஸ்ரீ கோதண்ட ராமர், திருவையாறு ஸ்ரீ தியாக பிரும்மத்தின் சீடர் ஸ்ரீ வேங்கட்ரமண பாகவதர் நினைவு மண்டபம் (அய்யம்பேட்டை) உள்ளிட்ட கோயில்கள் காவிரியின் தென் கரையில் உள்ளன.
காவிரியின் வட கரையில் உள்ள ஸ்ரீ மகாகணபதி தனி கோயில் கொண்டுள்ள கணபதியக்ரஹாரம், ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் (வட குரங்காடுதுறை), ஸ்ரீ ஜெகத்ரட்சகப் பெருமாள் (பெருமாள் கோயில்), ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் (மணலூர்), 108 திவ்யதேசங்களில் ஆறாவதான ஸ்ரீ கஜேந்திர மோட்சப் பெருமாள் (கபிஸ்தலம்),
ஏழாவதான ஸ்ரீ வல்வில் ராமர், புதன் பரிகார தலம் (புள்ள பூதங்குடி), 8-வது ஸ்ரீ படியளந்த பெருமாள், குரு பரிகார தலம் (ஆதனூர்), ஸ்ரீ சுவாமிநாத சுவாமி கோயில் ஸ்ரீ முருகப் பெருமானின் 4-ம் படைவீடு (சுவாமிமலை), திருஞானசம்பந்தருக்கு முத்துப் பந்தல் வழங்கிய ஸ்ரீதேனுபுரீஸ்வரர் (பட்டீஸ்வரம்) உள்ளிட்ட புகழ்பெற்ற ஆலயங்கள் உள்ளன.
மேலும் சிறியதும், பெரியதுமான நூற்றுக்கணக்கான ஆலயங்களும், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இன்றும் விளங்கும் முஸ்லிம் பெரு மகான்களின் தர்ஹாக்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் இந்தப் பகுதியில் நிறைந்து ஆன்மிகத்தையும், நட்புணர்வையும் வளர்த்து வருகின்றன.
இத்தகைய சிறப்புமிக்க ஆலயங்களைத் தரிசிக்கவும், வேண்டுதலை நிறைவேற்றவும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்தப் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
இருப்பினும், முறையான வழிகாட்டுதல்களோ, சரியான தகவல்களோ அவர்களுக்கு கிடைக்காததால், குறிப்பிட்ட சில ஆலயங்களையும், சுற்றுலாப் பகுதிகளையும் மட்டுமே அவர்கள் பார்த்துச் செல்கின்றனர்.
எனவே, பாபநாசம் நகரை சுற்றுலா மையமாக அறிவித்து, போதிய வசதிகளை அரசு செய்து தர வேண்டும். பயணிகளுக்கு சிறந்த வழிகாட்டிகளை நியமிக்க வேண்டும். அரசின் அனுமதி பெற்ற சிறப்பு சுற்றுலா வாகனங்களை அமைத்துத் தரவேண்டும். சரியான தகவல்களுடன் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக கையேடு தயாரித்து வழங்க வேண்டும்.
இங்குள்ள அனைத்துப் பகுதிகளையும் ஒரே நேரத்தில் சென்று பார்த்து மகிழும் விதத்தில் வாகன வழிப் பாதைகளை அமைக்க வேண்டும். அந்தந்த ஊர்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் விளம்பரப் பதாகைகள் அமைக்க வேண்டும். அனைத்துத் தரப்பினரும் எளிதில் சென்று வரும் வகையில் போதுமான அரசுப் பேருந்து, மினி பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் விரும்புகின்றனர்.
பாபநாசம் நகரை சுற்றுலா மையமாக அரசு அறிவிப்பதன் மூலம் இந்தப் பகுதியில் வியாபாரம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவை மேலும் வளர்ச்சி பெறும் வாய்ப்புள்ளது.
நமது வாழ்வுடனும், கலாசாரத்துடனும் ஒன்றுபட்ட ஆன்மிகப் பெருமைகளைக் கூறும் இதுபோன்ற கோயில்களில் உள்ள ஓவியங்கள், சிற்பங்கள் வடிவில் உயிரோட்டமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் காவிய நாயகர்களை இறை வடிவில் தரிசித்து மகிழ நாள்தோறும் வரும் நூற்றுக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக, சீர்மிகு கோயில்களில் அன்னதானத் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் இறை வழிபாட்டிற்காக கோயில்களுக்கு செல்லும் நூற்றுக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக, இதுபோன்ற முக்கிய இடங்களை சுற்றுலாத் தலமாக அறிவிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில், பாபநாசம் நகரை அரசு சுற்றுலா மையமாக அறிவித்து, இந்தப் பகுதிக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

