நீடாமங்கலம், ஆக. 11: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களின் மத்தியில் மேலோங்கியுள்ளது.
நீடாமங்கலத்தில் 18.01.1918-ல் தொடங்கப்பட்டது தற்போதைய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. தொடக்க காலத்தில் தஞ்சை மாவட்ட ஜில்லா போர்டு கட்டுப்பாட்டின் கீழ் பெண்களுக்கான நடுநிலைப் பள்ளியாகத் தொடங்கப்பட்டு, சத்திரம் இலாகாவுக்குச் சொந்தமான இடத்தில் பள்ளி இயங்கி வந்தது.
பின்னர், இப் பள்ளி தொடக்கப் பள்ளியாக தரம் குறைக்கப்பட்டது. ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை மட்டுமே இங்கு இருந்தன. தமிழக அரசு சார்பில் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் இயங்கத் தொடங்கிய காலத்தில், இப் பள்ளி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் வந்தது. இதைத் தொடர்ந்து, மாணவிகள் மட்டுமே கல்வி பயின்ற இப் பள்ளியில் இருபாலரும் கல்வி கற்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
பின்னர், ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பி. ராசமாணிக்கம் தனது பதவிக் காலத்தில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து | 10 லட்சம் ஒதுக்கீடு செய்து ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கான மூன்று கட்டடங்களைக் கட்டித் தந்தார்.
பள்ளி புதிய கட்டடத் திறப்பு விழாவில் தற்போதைய மத்திய அமைச்சர் ஆ. ராசா, அப்போதைய மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான டி.ஆர். பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் பள்ளிக்கு சொந்தக் கட்டடம் கிடைத்தது.
இப் பள்ளி தொடக்கத்திலிருந்தே மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது. 8 ஆண்டுகளுக்கு முன்பு (04.02.2002) ஒரே ஆண்டில் 6 மற்றும் 7-ம் வகுப்புகள் தொடங்கப்பட்டன. மத்திய அரசு நிதி உதவியுடன் புதிய கட்டடமும் கட்டப்பட்டு, ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, அடுத்த ஆண்டில் எட்டாம் வகுப்பு தொடங்கப்பட்டது. பள்ளியில் அப்போது 600 மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர். இந்நிலையில், இப் பள்ளியை அரசு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ந. சோமசுந்தரம் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் முயற்சி மேற்கொண்டனர். உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த பொதுமக்கள் சார்பில் அரசுக்கு செலுத்த வேண்டிய | 1 லட்சத்தை வசூல் செய்யப்பட்டு, நீடாமங்கலம் இந்தியன் வங்கியில் அரசுக்கு செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, 2007-2008-ம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளியாக இது தரம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உயர்நிலைப் பள்ளிக்கான அந்தஸ்து இப் பள்ளிக்கு இதுவரை கிடைக்கவில்லை. இதனால், அந்த ஆண்டில் எட்டாம் வகுப்பு முடித்த 87 மாணவ, மாணவிகளயும் ஒரு மாத கால தாமதத்துக்குப் பிறகு பெற்றோர்கள் வேறு பள்ளிகளில் சேர்த்தனர். படிப்பைத் தொடர முடியாத பிள்ளைகள் பாதியிலேயே படிப்பை நிறுத்தும் நிலையும் ஏற்பட்டது.
இதேபோல, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும் என்று நம்பி பெற்றோர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இதன் காரணமாகவே இப் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வருகை குறைந்து, தற்போது இப் பள்ளியில் 348 பேர் மட்டுமே பயின்று வருகின்றனர்.
இப் பள்ளி தரம் உயர்த்தப்படுவதன் மூலம் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பயன் பெறுவர். அதோடு, பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள வெளியூர்களுக்கு படிக்க வைக்க அனுப்பிவைக்க வேண்டுமே என்று கவலைப்பட வேண்டிய சூழ்நிலையும் இருக்காது.
எனவே, வரும் கல்வியாண்டிலாவது இப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்பதே நீடாமங்கலம் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.