வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கொள்ளிடம் ஆற்றங்கரை உடனடியாக பலப்படுத்தப்படுமா?

பாபநாசம், ஆக. 20: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியப் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை உயர்த்தி, செம்மைப்படுத்தும் பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Updated On :20 செப்டம்பர் 2012, 8:36 am

பாபநாசம், ஆக. 20: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியப் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை உயர்த்தி, செம்மைப்படுத்தும் பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

   பாபநாசம் ஒன்றியத்தில் சுமார் 5 கி.மீ. தொலைவு வரை கொள்ளிடம், காவிரி, அரசலாறு, திருமலைராஜன், குடமுருட்டி ஆறுகளும், அதன் கிளை ஆறுகளும் ஓடி, இந்தப் பகுதியை செழிப்பாக விளங்கச் செய்வதால், பாபநாசம் வட்டம் டெல்டா மாவட்டங்களின் இதயமாக விளங்குகிறது.

   இருப்பினும், மழைக் காலங்களில் ஆறுகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் ஊருக்குள் வெள்ளப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில், மற்ற நான்கு ஆறுகள், அதன் கிளை ஆறுகளிலிருந்து உபரி நீரை கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடுவது வழக்கம்.

    பாபநாசம் ஒன்றியத்திற்கு உள்பட்ட கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் வீரமாங்குடி, மணலூர், தேவன்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிகாடு, வடசருக்கை, உம்பளப்பாடி, கருப்பூர், வாழ்க்கை, எடக்குடி, திருவைகாவூர், பொன்பேத்தி உள்ளிட்ட கிராமங்களும், அவற்றைச் சூழ்ந்து பல சிறு கிராமங்களும் உள்ளன.

   இந்தக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.

மழைக் காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வரத்து உள்ளதாலும், மழை நீர் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் சேர்வதாலும் இந்தப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது.

    மேலும், கொள்ளிடம் ஆற்றின் உள்புறம், கரை ஓரம் எனத் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் ஆற்று நீர் தேங்கி, ஊருக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

  மேலும், கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் மணல் குவாரிகளுக்கு மணல் அள்ளிச் செல்ல நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்த வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தும் வகையில் கரைகள் வெட்டி அழிக்கப்படுவதால், அவை சேதமடைந்து ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்படுகிறது.

   அதோடு, இந்தப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை, கரும்பு, வெற்றிலை, காய்கறிகள், நெல் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன.

   இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வெள்ளக் காலங்களில் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ளும் பொருட்டு, தங்களின் வீடு, உடைமைகளை விட்டு, பாதுகாப்பான இடங்களில் வாரக் கணக்கில் தங்கும் நிலையும் உள்ளது.

    ஊருக்குள் வெள்ளம் சூழ்ந்து மக்கள் தத்தளிக்கும் நேரத்தில் தீயணைப்பு துறை, ராணுவத்தைச் சேர்ந்தோர் ஹெலிகாப்டர்கள், படகுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி பொதுமக்களையும், கால்நடைகளையும் மீட்டு வருவதும், இவற்றையும் மீறி சில சமயங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிர்ச் சேதம் ஏற்படுவதும் தொடர்ந்து நிகழ்கிறது.

    இதுபோன்ற காலங்களில் இங்கு வசிக்கும் மக்கள், அரசுத் துறையினர், தொண்டு நிறுவனத்தினர் கொள்ளிடம் ஆற்றின் பலவீனமான கரைப் பகுதிகளில் பலகைகளால் தடுப்புகளை ஏற்படுத்தியும், மணல் மூட்டைகளை அடுக்கிவைத்தும் கரைகளைப் பலப்படுத்துகின்றனர்.

   மேலும், ஆற்று நீர் வடியும் வரை ஊருக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில், ஆற்றங்கரையிலேயே இரவு, பகல் பாராமல் கண்விழித்து காத்தும் வருகின்றனர்.

   இதுபோன்ற அவல நிலை தொடராமல் தடுக்க, கொள்ளிடம் ஆற்றின் கரையைப் பலப்படுத்த வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து கோரி வந்தனர்.

    இதையடுத்து, மத்திய நீர் வள ஆதார அமைப்பினர் கொள்ளிடக் கரையை ஆய்வு செய்து, மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் | 96 கோடி நிதி ஒதுக்கீட்டில் கல்லணையிலிருந்து அணைக்கரை வரை ஆற்றின் வலது கரையிலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, கரையை உயர்த்தி பலப்படுத்த ஒப்பந்தம்விடப்பட்டு, பணிகள் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

   இருப்பினும், பருவமழை தொடங்க உள்ளதால், இந்தப் பகுதி மக்கள் வெள்ள அபாயத்தை நினைத்து, அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

    எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாகப் பணிகளைத் தொடங்கி, வெள்ள அபாயத்தின் பிடியில் வாழ்ந்து வரும் இந்தப் பகுதி மக்களைப் பாதுகாக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.