டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கலைக்கப்பட்ட வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் மீண்டும் தொடங்கப்படுமா?

பேராவூரணி, ஆக. 26: தமிழகத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட 200-க்கும் மேல்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களை மீண்டும் தொடங்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:49 am

கே. கான்முகமது

பேராவூரணி, ஆக. 26: தமிழகத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட 200-க்கும் மேல்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களை மீண்டும் தொடங்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

கிராமப் பகுதிகளில் விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் குறைந்த வட்டியில் நகைக் கடன் வழங்குவது, மானிய விலையில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட விவசாயித்திற்குத் தேவையான அடிப்படை உதவிகளைச் செய்வது ஆகிய நோக்கங்களுடன் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழகத்திலுள்ள 200-க்கும் மேல்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் நிர்வாகக் காரணங்களுக்காகக் கலைக்கப்பட்டு, அருகிலுள்ள வேறு சங்கங்களுடன் இணைக்கப்பட்டன.

முக்கியமாக, கடன் வசூலாகவில்லை என்ற காரணத்தினால்தான் கூட்டுறவுச் சங்கங்கள் கலைக்கப்பட்டன. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன்  ரூ.7 ஆயிரம் கோடி கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்ததால், திரும்பவும் இந்த வங்கிகள் தொடங்கப்படும் என விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்தனர்.

ஒரு சில மாவட்டங்களில் அரசியல் செல்வாக்கு காரணமாக கலைக்கப்பட்ட சில சங்கங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், கூட்டுறவுத் துறை அமைச்சர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தும், கலைக்கப்பட்ட 26 சங்கங்களில் ஒன்றுகூட புதுப்பிக்கப்படவில்லை. மேலும், இந்தச் சங்கங்களில் பணிபுரிந்த ஆயிரத்திற்கும் மேல்பட்ட பணியாளர்கள் மாற்றுப் பணி வழங்கப்படாமல் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இவர்கள் பணிபுரிந்த போது இவர்களிடம் இருந்து பெறப்பட்ட பிணை வைப்புத் தொகை, தொடர் வைப்புத் தொகை, வருங்கால வைப்பு நிதி, ஊதியப் பாக்கி எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.

கூட்டுறவுச் சங்கங்கள் கலைக்கப்பட்ட பிறகு, பலர் பணி ஓய்வு பெறும் வயதை அடைந்து, எந்த உதவியும் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். நலிவடைந்த கூட்டுறவுச் சங்கங்களை சிறப்பு தணிக்கை செய்து நிதி வழங்குவதற்காக மத்திய அரசால் 2008 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பேராசிரியர் வைத்தியநாதன் கமிட்டி, கலைக்கப்பட்ட சங்கங்கள் பற்றிய எந்தவித சிறப்புத் தணிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலரும், வழக்குரைஞருமான ப. பாலசுப்பிரமணியன் கூறியது:

கிராமப்புற விவசாயிகள் பயன்பெறவும், விவசாய பணிகளை குறிப்பிட்ட காலத்தில் தொடங்கவும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் பல்வேறு வகையில் உதவி செய்து வந்தன.

எங்களது பகுதியான செருவாவிடுதியில் 1500-க்கும் மேல்பட்ட உறுப்பினர்களுடன் இயங்கி வந்த வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கம் அருகிலுள்ள ஊராட்சியான திருச்சிற்றம்பலத்துடன் இணைக்கப்பட்டது. இதனால், எங்கள் பகுதி விவசாயிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

சமீபத்தில் திருச்சிற்றம்பலம் கிளையின் மூலம் மாடு வளர்ப்பதற்கான கடன் வழங்கப்பட்டதில் ஒருவர்கூட செருவாவிடுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை. இதே நிலைதான் கலைக்கப்பட்ட சங்கங்கள் உள்ள பகுதி மக்களின் நிலை.

எனவே, கிராமப்புற விவசாயிகள் மேன்மையடைய, கலைக்கப்பட்ட அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களையும் புதுப்பிக்க வேண்டும் என்றார் அவர்.

கலைக்கப்பட்ட ஒரு சங்கத்தில் பணிபுரிந்து வேலைவாய்ப்பை இழந்த செயலர் ஒருவர் கூறியது:

எந்தவித அறிவிப்புமின்றி திடீரென 200-க்கும் மேல்பட்ட சங்கங்களைக் கலைத்ததோடு, எங்களுக்கு மாற்றுப் பணி வழங்காததால் என்னைப் போன்ற ஆயிரத்திற்கும் மேல்பட்டோரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. சாலைப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கியதைப் போல, எங்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எங்களோடு பணிபுரிந்த பல பட்டதாரிகள் மாற்றுப் பணி இல்லாததால், கூலி வேலை செய்து வருகின்றனர். எனவே, கலைக்கப்பட்ட அனைத்து சங்கங்களையும் மீண்டும் தொடங்கி, எங்களுக்குப் பணி வழங்க வேண்டும் என்றார் அவர்.

கிராமப்புற விவசாயிகளை வட்டிக்கு பணம் கொடுப்போரிடமிருந்து காப்பாற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.