ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மாற்றத்தை ஏற்படுத்துகிறதா, காவலருக்கான எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்?

திருச்சி, நவ. 30: உயிர்க்கொல்லி நோய் எய்ட்ஸ் என்ற அச்சுறுத்தல், தொடக்கத்தில் முறை தவறிய உறவுகளால் பரவியதால் இன்னமும் தொடரும் ஏளனம் இவற்றுக்கு மத்தியில், உண்மையான தகவல்களை எடுத்துச் சொல்லும் பணியில், ச

Updated On :20 செப்டம்பர் 2012, 9:00 am

திருச்சி, நவ. 30: உயிர்க்கொல்லி நோய் எய்ட்ஸ் என்ற அச்சுறுத்தல், தொடக்கத்தில் முறை தவறிய உறவுகளால் பரவியதால் இன்னமும் தொடரும் ஏளனம் இவற்றுக்கு மத்தியில், உண்மையான தகவல்களை எடுத்துச் சொல்லும் பணியில், சிறப்பாகச் செல்கிறது "காவல் துறையினருக்கான எச்ஐவி- எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்'.

  காவல்துறையினராலும் பெண் பாலியல் தொழிலாளர்கள் சில பிரத்யேக பிரச்னைகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதுடன், எச்ஐவி தொற்று, பாலின மாறுதல்கள் போன்றவற்றில் விழிப்புணர்வின்றி இருக்கும் துறையும் காவல்துறைதான்- சில ஆண்டுகளுக்கு முன்வரை.

  அதனால்தான், வேறெந்த மாநிலத்திலும் இல்லாத முன்முயற்சியாக தமிழ்நாட்டில் காவல் துறையினருக்கான விழிப்புணர்வு முகாம்கள் கடந்த 2008-ல் தொடங்கப்பட்டன. ஆரம்பத்தில் காவல் துறைத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஆணையர்கள், கண்காணிப்பாளர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து, துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு மட்டும் நடத்தப்பட்டு, இப்போது தலைமைக் காவலர்கள், முதல்நிலைக் காவலர்கள், காவலர்களுக்கு இந்தப் பயிற்சி நடைபெற்று வருகிறது.

  2008-ம் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் 14 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட காவலர்கள் இந்த முகாம்களில் பங்கேற்றுள்ளனர்.

  வழக்கமான முகாம்கள்தானே, என்ன பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிடப் போகின்றன? என்ற கேள்விக்கு பதிலளிக்கின்றனர், காவல் துறையினருக்குப் பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் எச்ஐவியுடன் வாழ்வோர் கூட்டமைப்பின் தலைவி அ. தமிழ் மற்றும் அரவானி சோனாலி.

  அ. தமிழ்: ""எச்ஐவி- எய்ட்ஸ் அடிப்படைத் தகவல்கள், ஓரினச் சேர்க்கையாளர்களைப் புரிந்து கொள்ளுங்கள், அரவானிகள் சமுதாயத்தைப் புரிந்து கொள்ளுங்கள், பாலியல் தொழிலாளர்களைப் புரிந்து கொள்ளுங்கள், போதைப் பழக்கமுள்ளவர்களைப் புரிந்து கொள்ளுங்கள், எச்ஐவியுடன் நம்பிக்கையுடன் வாழ முடியும் ஆகிய 6 தலைப்புகளில்தான் வகுப்புகளை எடுக்கிறோம்.

  பெண் பாலியல் தொழிலாளர்கள், எச்ஐவி தொற்றாளர்கள் ஆகியோருக்கு ஏற்படும் பிரதான பிரச்னை சொத்துரிமை. காவல் நிலையங்களில் பெரும்பாலும் இந்தப் பிரச்னைகள் ஏளனமாகத் தூக்கியெறியப்படும். ஆனால், விழிப்புணர்வு பயிற்சிகளுக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான சொத்துரிமை பிரச்னைகளை காவல் துறையினர் சுமுகமாகத் தீர்த்து வைத்துள்ளனர்.

  பாலியல் தொழிலாளர்கள் மீது வழக்குப் போடக் கூடாது என்று சொல்கிறீர்களா? என முகாமின் பாதியில் ஆவேசமாகக் கேள்வி எழுப்பிய காவலர்களும் உண்டு. "வழக்கு போடக்கூடாது என்பதல்ல, அவர்களின் உரிமைகளை வழங்க வேண்டுமல்லவா?' என விளக்கிய பிறகு எல்லோரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.   வேறு எந்த பிரச்னை இருந்தாலும் காவல் துறையின் உதவியுடன்தான் தற்போது தீர்வு காண வேண்டியிருக்கிறது. அப்படி ஏராளமான பிரச்னைகளை பயிற்சி பெற்ற காவலர்கள் தீர்த்து வைத்திருக்கிறார்கள். தங்களது வீடுகளில் இருக்கும் பிரச்னைகளை பின்னாளில் தொலைபேசியில் அழைத்து விவரம் கேட்டவர்களும் உண்டு. தனக்குள்ள உடல் ரீதியான பிரச்னைகளை சொல்லி சிகிச்சை பெற்று வருபவர்களும் உண்டு'' என்கிறார் தமிழ்.

  சோனாலி: ""திசைமாறித் திரிந்த காலங்களில் என்னை விரட்டியடித்த காவலர்களுக்கும் இப்போது பயிற்சியளித்திருக்கிறேன். இந்த முகாம்கள் எல்லாம் நேரத்துக்குப் பிடித்த கேடு என்று கூறியவர்கள் பலரும், முகாம் முடிந்த பிறகு "மேடம்' என்று என்னை அழைத்திருக்கிறார்கள்.

  ஆசிரியராக வேண்டும் என்ற ஆசை பட்டுப்போய் விட்டது என்று அச்சமுற்றிருந்த நிலையில், ஆயிரக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்து வருகிறேன். எங்காவது ஒரு காவல் நிலையத்தில் ஓர் அரவானியோ, ஓரினச் சேர்க்கையாளரோ புகார் கொண்டு வந்தால், காவல் துறையினர் எங்களையும் தொலைபேசியில் அழைத்து ஆலோசனை கேட்டுக் கொள்கின்றனர்.     விரட்டியடித்த நிலை மாறியிருக்கிறது, அங்கீகாரம் கிடைத்திருக்கிறது எனத் துணிவுடன் சொல்ல முடியும்'' என்கிறார் சோனாலி. சம வாய்ப்பும், சம உரிமையும் பாலியல் சிறுபான்மையினருக்கும் உண்டு என்பதுதான் டிச. 1-ம் தேதி உலக எய்ட்ஸ் நாளின் பிரகடனம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.