ஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,500 வழங்கப்படுமா?

திருவாரூர், ஜன. 5:  அரிசி விலை கிலோ ரூ. 35-க்கு விற்றாலும், நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,500 விலை வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை இன்னும் நிறைவேறாமல் இழுபறியிலேயே உள்ளது.    கா

Updated On :20 செப்டம்பர் 2012, 10:39 am

திருவாரூர், ஜன. 5:  அரிசி விலை கிலோ ரூ. 35-க்கு விற்றாலும், நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,500 விலை வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை இன்னும் நிறைவேறாமல் இழுபறியிலேயே உள்ளது.

   காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் நிகழ் பருவத்தில் சம்பா, தாளடி நெல் சாகுபடி ஏறத்தாழ 4.50 லட்சம் ஹெக்டேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவ மழை பருவம் தவறிப் பெய்ததன் காரணமாக, பல்வேறு நிலைகளில் இருந்த நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், ஏறத்தாழ 30 சதவீதம் அளவுக்கு நெல் மகசூல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   இதில் முன்பட்ட சாகுபடி அறுவடைப் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. நெல் பொது ரகம் குவிண்டால் ஒன்று ரூ. 1,000-த்துக்கும், சன்ன ரகம் குவிண்டால் ஒன்று ரூ. 1,050-க்கும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

   தொடர் வறட்சி, வெள்ளம் காரணமாக, விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறையால் உயர்ந்துவிட்ட தொழிலாளர்களின் கூலி, விதை மற்றும்  இடுபொருள்கள் உள்ளிட்டவற்றாலும் சாகுபடிச் செலவுகள் பலமடங்கு உயர்ந்து விட்டன. ஆனால், உற்பத்தி செலவுக்கேற்ப கொள்முதல் விலை உயர்த்தப்படாதது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு நெல் விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆறுபாதி பி. கல்யாணம் கூறியது:

    நெல், கரும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து விவசாய விளை பொருள்களுக்கும் உற்பத்திச் செலவுக்கு மேல் குறைந்தபட்சம் 50 சதவீதம் கூடுதலாக குறைந்தபட்ச கட்டுப்படியாகும் ஆதாய ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் என, தேசிய விவசாயிகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதன்படி, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.1,800 வழங்க வேண்டும்.

   உதாரணமாக, 1981ஆம் ஆண்டில் மத்திய அரசின் நெல் கொள்முதல் விலை குவிண்டால் ரூ. 120. அப்போது ஒரு ஜோடி ஆண், பெண் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் கூலி ரூ. 12. ஒரு குவிண்டால் நெல்லை விற்பனை செய்தால் 10 ஜோடி தொழிலாளர்களுக்கு கூலி வழங்க முடியும்.

    ஆனால், தற்போது ஒரு ஜோடி தொழிலாளர்களுக்கு ரூ. 300 என்ற அளவில் கூலி உயர்ந்துள்ளது. இதன்படி பார்க்கும் போது, ஒரு குவிண்டால் நெல்லுக்கு தற்போது அரசு வழங்கும் விலையைக் கொண்டு 3 ஜோடிகளுக்கு மட்டுமே கூலி வழங்க முடியும். இதை அரசு கருத்தில் கொண்டு, இடைக்கால ஏற்பாடாக குவிண்டாலுக்கு ரூ. 1,500 விலை வழங்க வேண்டும் என்றார் கல்யாணம்.

கொள்முதல் நிலைய முறைகேடுகள்:    நெல்லுக்கான விலை மிகவும் குறைவு என்பது ஒரு புறம் இருந்தாலும், நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் செயல்படும் கொள்முதல் நிலையங்களில் பல ஆண்டுகளாக பரவலாகக் காணப்படும் முறைகேடுகளாலும் விவசாயிகளுக்கு மேலும் இழப்பு ஏற்படுகிறது.

    இந்த நிலையங்களில் உள்ள நெல் தூற்றும் இயந்திரத்தின் வடிவமைப்புக் கோளாறு காரணமாக, நல்ல நெல்லும் பதருடன் சேர்ந்து வெளியேறுகிறது. இந்த இயந்திரத்தின் வடிவமைப்பில் உரிய மாற்றங்கள் செய்ய வேண்டும். மேலும், எடையில் முறைகேடுகள் நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டின் காரணமாக, கொள்முதல் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட மின்னணு தராசுகளிலும் தில்லுமுல்லு செய்யப்படுகின்றன என்கின்றனர் விவசாயிகள்.

    சட்டவிரோதமான தொகைப் பிடித்தம், கூடுதல் எடை வைத்தல் உள்ளிட்டவற்றால் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 50 முதல் ரூ. 70 வரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதற்கு கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் மற்றும் பல நிலைகளில் அலுவலர்களுக்கு கையூட்டு அளிக்க வேண்டிய நிலை உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

     நிகழ் சம்பா, தாளடி பருவத்தில் டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் கொள்முதல் இலக்கு 14 லட்சம் டன்.  இதன்படி, 14 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும்போது விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 70 முதல் ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது என்கிறார் ஆறுபாதி பி. கல்யாணம்.

    இதைத் தவிர்க்கும் வகையில், நுகர்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளர்களின் தொழில் சங்கப் பிரதிநிதிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், வாணிபக் கழக உயர் அலுவலர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கொண்ட கூட்டத்தைக் கூட்டி, முறைகேடுகளுக்கு முற்றிலுமாக முடிவு கட்ட வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.      ஏற்கெனவே உரிய விலை கிடைக்காதது, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பு ஆகியவற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, பொங்கல் பரிசாக அரசு நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.1,500 என நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும், ஈரப்பத அளவு உள்ளிட்ட தரக் கட்டுப்பாடுகளில் தளர்வு செய்து, கொள்முதல் செய்ய வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் ஒருமித்தக் கோரிக்கையாக உள்ளது.                                                                      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.