திருச்சி, அக். 13: மனிதக் கழிவு நீர் ஆறுகள், வாய்க்கால்களில் வெளியேற்றப்படுவதால் பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் எழுந்துள்ளதை கவலையுடன் குறிப்பிடுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
திருச்சி மாநகர், புறநகரப் பகுதிகளில் பிரம்மாண்டமாக எழுந்துள்ள அடுக்ககக் குடியிருப்புகளில் (அபார்ட்மென்ட்ஸ்) இருந்து வெளியேற்றப்படும் செப்டிக் டேங்க் கழிவு நீரை வாகனங்களில் நிரப்பிக் கொண்டு, அவற்றை வாய்க்கால்களில் கொட்டுகின்றன தனியார் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்கள்.
நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பல்வேறு திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளால் தீட்டப்பட்டு பல கோடிகள் செலவழிக்கப்படுகின்றன. அவற்றுள் ஒரு திட்டம்தான் புதை சாக்கடைத் திட்டம்.
இந்தத் திட்டத்தின்படி, கழிப்பறைக் கழிவு உள்ளிட்ட அத்தனைக் கழிவுகளையும் குழாய் மூலம் ஓரிடத்தில் சேர்த்து, திறந்தவெளி சுத்திகரிப்பு அமைப்பில் அவற்றைக் கொட்டி சுத்திகரிக்கிறது அரசு நிர்வாகம்.
இப்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் ஏறத்தாழ 90 சதம் மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டுள்ளன.
ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் இந்தக் கழிவுகள் கலந்து மனிதர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடாது என்பதுதான் இதுபோன்ற திட்டங்களின் சாரம்.
ஆனால், அடுக்ககக் குடியிருப்புகளில் இருந்து பிரம்மாண்டமான செப்டிக் டேங்குகளில் சேகரமாகும் கழிவுகளை, சுத்தம் செய்யும் பெயரில் எடுத்துக் கொண்டு, குறிப்பிட்ட கட்டணங்களையும் குடியிருப்போரிடம் வாங்கிக் கொண்டு நகர், புறநகர்ப் பகுதிகளிலுள்ள வாய்க்கால்களில் கொட்டுகின்றனர்.
குறிப்பாக, திருச்சி மாநகரில் சில பத்தாண்டுகளுக்கு முன் பாசன வாய்க்காலாகவும், இப்போது கழிவு நீர் சாக்கடையாகவும் ஓடிக் கொண்டிருக்கும் இரட்டை வாய்க்காலில் இந்தக் கழிவு நீர் இரவு நேரங்களில் கொட்டப்படுகிறது. இந்த வாய்க்கால் சிந்தாமணி பகுதியில் காவிரியில் கலப்பது குறிப்பிடத்தக்கது.
உறையூரிலிருந்து திருத்தாந்தோனி செல்லும் வழியில் ஆள் நடமாட்டமில்லாத குடமுருட்டி ஆற்றுப் பகுதிகளிலும் இந்தக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இந்தக் குடமுருட்டியும் காவிரியாற்றில் கலப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, புறநகர்ப் பகுதியில் முசிறி சாலையிலுள்ள பாச்சூர் போன்ற கிராமங்களில் பிரதான சாலையோரத்தில் காவிரியை ஒட்டியவாறு ஓடும் வாய்க்காலிலும் இந்தக் கழிவு நீர் கொட்டப்படுகிறது. நகர்ப் பகுதிகளிலாவது இரவு நேரங்களில் இந்த வெளியேற்றம் நடைபெறுகிறது. ஆனால், புறநகர்ப் பகுதிகளில் பட்டப்பகலிலேயே வாய்க்கால்களில் கழிவு நீரைக் கொட்டுகின்றனர்.
நடவடிக்கை என்ன?
இவ்வாறு நீர்நிலைகளை அசுத்தப்படுத்தும் செயல்கள் மீது நடவடிக்கை எடுக்க, நகர், மாநகர்ப் பகுதிகளில் "மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் சட்டம்' (மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம்), ஊரகப் பகுதிகளில் "தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம்' (வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கலாம்) ஆகியவை வழி செய்கின்றன.
அதேபோல, சுகாதாரத் துறையில் "பொது சுகாதாரச் சட்டம்' இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்கிறது. ஆனால், இந்தச் சட்டங்களின்படி எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற கேள்விக்கு எந்தத் துறைகளிலும் பதில் இல்லை.
அதேநேரத்தில், இன்னொரு மோசமான நடவடிக்கையும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை லாவகமாக வெளியே தப்பவைக்கின்றன. அதாவது, மிகக் குறைந்த அபராதமாக | 5 கூட இந்தச் செயல்களுக்கு விதிக்க சட்டத்தில் வழியிருக்கிறதாம். வெறும் | 5ஐ மட்டும் அபராதமாகச் செலுத்திவிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை "கவனித்தால்' போதும் என்ற நிலை நீடிக்குமானால், எப்படி இதைத் தடுக்க முடியும்? எனக் கேள்வி எழுப்புகின்றனர் இதுபோன்ற பிரச்னைகளை கவனித்து வரும் ஓரிரு நேர்மையான அதிகாரிகள்.
தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு:
மழைக்காலம் வேறு தொடங்கிவிட்டதால், இதுபோன்ற கழிவுகளால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் மாசடைந்து, அவற்றால் மலேரியா, வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்கள் பரவும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன.
மாவட்ட ஆட்சியர் நேரடியாகக் கவனம் செலுத்தி ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை "பொறி' வைத்துப் பிடித்து கடுமையான நடவடிக்கை எடுத்தால் ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சட்டப்படி இவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதன் அவசியத்தை அரசுக்குத் தெரியப்படுத்தி அதிகபட்ச அபராதம், தொடர்ந்து தவறு செய்வோருக்கு சிறை, வாகனங்களுக்குத் தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்தது பச்சை துரோகம்! - மு. தமிமுன் அன்சாரி

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு

ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா

இளைஞா் விஷமருந்தி தற்கொலை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

