வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

திருக்கோயில் குளங்கள் சீரமைக்கப்படுமா?

பாபநாசம்,அக். 28: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதிகளிலுள்ள சிறப்பு மிக்க திருக்கோயில் குளங்களைச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள், பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.   பாபநாசம் வட்டாரத்தில் காவிரிக்கு

Updated On :20 செப்டம்பர் 2012, 5:02 pm

பாபநாசம்,அக். 28: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதிகளிலுள்ள சிறப்பு மிக்க திருக்கோயில் குளங்களைச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள், பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

  பாபநாசம் வட்டாரத்தில் காவிரிக்கு வட, தென் கரையில் என புகழ்மிக்க கோயில்களில் 108 சிவலிங்கங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ள பர்வதவர்தினி உடனுறை ராமலிங்க சுவாமி கோயில், தவள வெண்ணகை அம்பாள் சமேத பாலைவன நாதர் கோயில், கர்பரட் சாம்பிகை சமேத ஸ்ரீ முல்லை வனநாதர் கோயில், பங்கஜ வள்ளித் தாயார் சமேத பாப விமோசனப் பெருமாள் கோயில் உள்ளிட்டவை சிறப்பானவை.

  பாபநாசம் ராமலிங்க சாமி கோயில் குளத்தில் நீராடி, பின்னர் அருகிலுள்ள குடமுருட்டி ஆற்றிலும் நீராடி சுவாமியை தரிசித்தால் பிரம்மஹத்தி உள்ளிட்ட தோஷங்கள் விலகும், குஷ்ட ரோகம் நீங்கும் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது.

  திருப்பாலைத்துறை பாலைவன நாதர் கோயில் குளம் வஷிஷ்ட தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இக் குளத்தில் நீராடி, இறைவனை வழிபட்டால் அனைத்து பாவங்களும் விலகும்.

   இதுபோல, கர்பரட்சாம்பிகை கோயில் குளம் காமதேனு பசுவால் உருவாக்கப்பட்டு, சீரகுண்டம் என்ற பெயருடன் இன்றளவும் உள்ளது. பாபவிநாச பெருமாள் குளத்தில் நீராடி வழிபட்டால் முற்பிறவிப் பாவங்கள்,தோஷங்கள் தீரும் என்பது நம்பிக்கை.

   பாபநாசம் அருகிலுள்ள திருநல்லூர் கிரிசுந்தரி சமேத கல்யாண சுந்தரேசுவரர் கோயில் குளம் குந்தியின் பாவம் போக்க, சிவன் உருவாக்கியது. மாசி மாதப் பெüர்ணமி நாளில், இக் குளத்தில் 7 கடல்கள் சங்கமிப்பதாகவும், அப்போது இதில் நீராடி வழிபட்டால் முற்பிறவிப் பாவங்கள் தீரும் என்றும் நம்பப்படுகிறது.

   இன்றளவிலும் மாசிப் பெüர்ணமி திதியன்று பக்தர்கள் இக் குளத்தில் நீராடி, முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றி, இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.

   இத்தகைய சிறப்பு மிக்க கோயில் குளங்கள் சரிவரப் பராமரிக்கப்படாததால் செடி,கொடிகள் வளர்ந்து, தூர்ந்து வருகின்றன.

   குளங்களைச் சுற்றியுள்ள தனியார் ஆக்கிரமிப்புகளால் நீர் வரும் வழிகளும், போகும் வழிகளும் அடைபட்டுள்ளன. குப்பைக் கூளங்களால் குளத்திலுள்ள நீர் தூய்மையற்று, மாசடைந்த நிலையில் பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது.

  கோயில்களுக்கு வரும் பக்தர்கள் முதலில் நாடுவது அந்தக் கோயிலில் உள்ள குளங்களைத்தான். ஆனால், குளங்கள் மாசடைந்துள்ள நிலையில் குளத்து நீரை பெயரளவில் தெளித்து, ஆறுதலடைந்து செல்கின்றனர்.

  எனவே, சிறப்பு வாய்ந்த திருக்கோயில் குளங்களை பக்தர்கள் பயனடையும் வகையில் சீர்படுத்தித் தர வேண்டும் என்பதே ஆன்மிக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

  இதுகுறித்து ஆன்மிக ஆர்வலர் இரா. முருகேசன் கூறியது:

  திருக் கோயில்கள், குளங்கள், ஆறுகள் நமது கலாசாரத்தின் ஆணி வேராக உள்ளன. மூர்த்தி, தலம், தீர்த்தம் என கோயில் குளங்கள் சிறப்பான நிலையில் பேசப்படுகின்றன.

  கோயில் குளங்களில் நீராடி இறைவனைத் தொழுவது புண்ணியச் செயல். ஆனால், அண்மைக் காலமாக கோயில் குளங்கள் கவனிப்பாரற்று, மாசடைந்த நிலையில் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் கோயில் குளங்களைச் சீரமைத்துத் தர வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.