இசைப் பல்கலை.தொடங்குவது எப்போது?

தஞ்சாவூர், செப். 24:   தமிழகத்தில் உலகத் தரத்தில் இசைப் பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்ற முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பு செயல் வடிவம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.      இசை எக்காலத்திலும் எ
Updated on
2 min read

தஞ்சாவூர், செப். 24:   தமிழகத்தில் உலகத் தரத்தில் இசைப் பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்ற முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பு செயல் வடிவம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

     இசை எக்காலத்திலும் எந்நாட்டு மக்களாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விதிமுறைகளைக் கொண்டு வளர்க்கப்பட்ட ஒரு கலை. இசை மனித மனங்களைப் பண்படுத்தக் கூடியது. அலைந்து கொண்டிருக்கும் மனதைப் பண்படுத்துவதில் யோகாவுக்கும், இசைக்கும் முக்கிய இடமுண்டு. யோகா பயிற்சியின் மூலம் மனம் அமைதியடைகிறது. ஆனால், இசையை கேட்கும் போதே மனதில் அமைதியும், சாந்தமும் ஏற்படுகிறது.

    இசை ஒரு தெய்வீகக் கலையாகப் போற்றப்பட்டு தமிழர் கலாசாரத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இறைவனை அடைய இசையைச் சமயச் சான்றோர் ஒரு கருவியாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

   இறைவனை வழிபாடு செய்வதற்கு மட்டுமல்லாமல், பாமர மக்கள் வாழ்க்கையிலும் பிறப்பு முதல் இறப்பு வரை இசை உடன் வந்து கொண்டிருக்கிறது. சங்க இலக்கியத்தில் பாணாற்றுப்படை நூல்களில் இசைவாணர்கள் தோல் கருவி, துளைக்கருவி கொண்டு இசை பாடி வந்த சான்றுகளும் உள்ளன.    செவ்வியல் இசையைத் தவிர, மக்கள் இசையாகப் போற்றப்படும் நாட்டுப்புற இசையும் தமிழர்கள் வாழ்வில் முக்கிய அங்கமாக இருந்துள்ளது.

    இசைக்கு தற்போது அரசு ஆதரவு இல்லாத ஒரு சூழலே நிலவுகிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இசை என்பது பழகிப் பாடுவதற்கு மட்டுமன்றி கேட்டு இன்புறச் செய்வதுடன் ஆய்வுக்குரிய ஒன்றாகவும் உள்ளது.   தமிழகத்தில் திருவையாறு, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் இசைக் கல்லூரியும், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இசை ஒரு துறையாக இருந்து வருகிறது.

   இன்றைய சூழலில் இசையைப் பயிலவும், ஆய்வு செய்யவும் குறைந்த அளவிலேயே வாய்ப்புகள் உள்ளன. தற்போது இசையின் முக்கியத்துவம் எப்படி உள்ளது என்பதை தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகள் மூலம் மட்டுமே கண்டு ஓரளவு உணர முடிகிறது. இசைத் துறையில் திறமையானவர்களை இனம் கண்டு கலைத் திறனை மேம்படுத்த ஓர் இசைப் பல்கலைக்கழகம் அமைவது அவசியம்.

   இந்நிலையில், முதல்வர் எழுதிய உளியின் ஓசை கதை படப்பிடிப்பை கடந்த 6.10.2007 அன்று சென்னையில் தொடக்கி வைத்தார் முதல்வர் மு. கருணாநிதி. அப்போது கலைஞர்கள் மட்டுமன்றி அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் அரிய வகை இசைக் கருவிகள், அவற்றைப் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், ஓர் அருங்காட்சியகத்துடன் கூடிய இசைப் பல்கலைக்கழகம் தமிழகத்தில் உருவாக்கப்படும் என்றார் முதல்வர்.

    அப் பல்கலைக்கழகம் தமிழகம், இந்தியாவுக்கு மட்டுமன்றி உலகம் முழுக்க இருப்பவர்களுக்குப் பயன்படும் வகையில் இருக்கும் என்றும் கூறினார்.

  ஆனால், முதல்வர் அறிவித்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இசைப் பல்கலைக்கழகம் தொடங்குவது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. உலகப் பண்பாட்டின் அடையாளச் சின்னமாக திகழும் கலைக்கோயிலான தஞ்சை பெரிய கோயில் தற்போது ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடி வருகிறது.

இந்நாளில் கலைக்கு மேலும் பொலிவு சேர்க்கும் வகையில், இசைப் பல்கலைக்கழகம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பு மக்களிடமும் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com