கரூர், ஜன. 8: உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தல் திங்கள்கிழமை (ஜன. 10) நடைபெறுகிறது.
கரூர் மாவட்டத்தில் கரூர் நகராட்சி 19-வது வார்டு, இனாம்கரூர் மூன்றாம் நிலை நகராட்சி 21-வது வார்டு, கடவூர் ஊராட்சி ஒன்றியம் 2-வது வார்டு மற்றும் தென்னிலை தெற்கு, காளையப்பட்டி, கருப்பம்பாளையம், பள்ளபாளையம், பொருந்தலூர் ஆகிய ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. இந்தப் பதவிகளுக்கான இடைத்தேர்தலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் டிசம்பர் 22-ம் தேதி அறிவித்தது. தொடர்ந்து, வேட்புமனுத் தாக்கல், வேட்புமனுக்கள் பரிசீலனை, வேட்புமனுவைத் திரும்பப் பெறுதல் ஆகியவை நடைபெற்றன.
இதன்படி, கரூர் நகராட்சி, கடவூர் ஊராட்சி ஒன்றியம், தென்னிலைதெற்கு, காளையாப்பட்டி, கருப்பம்பாளையம், பொருந்தலூர் ஆகிய 6 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இனாம்கரூர் நகராட்சியில் காங்கிரஸ் சார்பில் ஏ. குமரேசனும், சுயேச்சையாக கு. பாலமுருகனும் போட்டியிடுகின்றனர். இதேபோல, பள்ளபாளையம் 3-வது வார்டுக்கு (தாழ்த்தப்பட்டோர், பொது) கே. விவேகானந்தன், எஸ். சண்முகராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர். தற்போது, இந்தப் பகுதிகளில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பேங்க். சுப்பிரமணியன், இனாம்கரூர் நகர திமுக செயலர் கே. கந்தசாமி, காங்கிரஸ் நகரத் தலைவர் எஸ்.சி. அங்கமுத்து உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.
திங்கள்கிழமை நடைபெறும் இடைத்தேர்தலில் இனாம்கரூர் நகராட்சியில் 504 பெண்களும், 496 ஆண்களும் வாக்களிக்கின்றனர். இவர்கள் வாங்கப்பாளையத்திலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வாக்களிக்கின்றனர்.
பள்ளபாளையம் வார்டு எண் 3-க்கு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க 1,305 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் பெண்கள் 688 பேர், ஆண்கள் 617 பேர். பள்ளப்பாளையத்திலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 2 பூத்துகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜன. 12-ம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், பாதுகாப்பு பணிகளை போலீஸôரும் கவனித்து வருகின்றனர்.