திருச்சி, ஜன. 11: திருச்சி நகராட்சியாக இருந்தபோதே அரசாணை வெளியிடப்பட்டு, 26 ஆண்டுகளாக இப்போது வரை கிடப்பில் இருக்கிறது "யானைக்குளம் வணிக வளாகம்' அமைக்கும் திட்டம்.
திருச்சி மாநகராட்சிக் கூட்டங்களின்போது அடிக்கடி எழுப்பப்படும் விஷயங்களில் முக்கியமானது "யானைக்குளம் வணிக வளாகம்' அமைக்கும் திட்டம். ராணி மங்கம்மாள் காலத்தில் யானைகளைக் குளிப்பாட்டும் குளமாக இருந்த இடம்தான் இத்திட்டத்துக்கான இடம்.
ஏறத்தாழ 40ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த இடம் நகரின் மையப் பகுதியான சிங்காரத்தோப்பு பகுதியில் அமைந்துள்ளது. தெப்பக்குளம் மற்றும் சிங்காரத்தோப்புப் பகுதியில், ஏறத்தாழ 36 ஆண்டுகளுக்கும் முன்பு உருவான "பர்மா பஜார்' (பர்மா அகதிகளின் கடைகள்) வியாபாரிகளுக்கு இந்த இடத்தில் வணிக வளாகம் கட்டித் தருவதென அப்போதைய அரசு முடிவு செய்தது.
அப்போதைய அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் முயற்சியில் 1974-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, 1975-ல் அப்போதைய திருச்சி நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏராளமான முயற்சிகள், நீதிமன்ற முன்னெடுப்புகள், தீர்ப்புரைகள் இவற்றுக்கும் மத்தியில்தான் இன்னமும் தொடர்கிறது வணிக வளாகம் கட்டும் கோரிக்கை.
இடையிடையே, மறுவாழ்வுத் துறை சார்பில் இந்த வணிக வளாகம் அமைக்க ரூ. 36 லட்சம் நிதியுதவி வழங்குவதென்றும்... பர்மா பஜார் வியாபாரிகளிடம் தலா ரூ. ஒரு லட்சம் பெற்றுக் கொண்டு கடைகள் கட்டித் தருவதென்றும்... வியாபாரிகளிடமே நிலத்தை ஒப்படைத்து அவர்களையே கடைகளைக் கட்டிக் கொள்ள வைத்து நில வாடகை பெற்றுக் கொள்வதென்றும்... என ஏராளமான திட்டங்கள் மாறி மாறி வடிவமைக்கப்பட்டன.
அண்மையில் தீபாவளிப் பண்டிகையின்போது வாகன ஓட்டிகளுக்கு வாகன நிறுத்தம் அமைத்துத் தர மாநகராட்சி முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, பர்மா பஜார் வியாபாரிகள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர். இத்தனை நடவடிக்கைகள் நடைபெற்று வந்த போதிலும், "இந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட மாநகராட்சியின் நடவடிக்கையில் உள்ளது' என்ற பதில் வந்துகொண்டேதான் இருக்கிறது. மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் நியமனம் எப்போது செய்யப் போகிறீர்கள்? என மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கேட்டால், "மாநகராட்சியின் மொத்த வருவாயில் 49 சதம் வரைதான் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும் என்பதால், புதிய ஊழியர் நியமனம் செய்ய முடியவில்லை' எனப் பதிலளிக்கப்படுகிறது.
ஆனால், வருவாயைப் பெருக்க இந்த "யானைக்குளம்' போன்ற பல இடங்களில் வணிக வளாகம் கட்ட வசதியிருந்தும் அதற்கான நடவடிக்கையை மாநகராட்சி அலுவலர்களோ, மாமன்ற கட்சியினரோ மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்றக் குழுத் தலைவர் ரெ. ஸ்ரீராமன் கூறியது:
"ஏறத்தாழ 7 ஆண்டுகளாக அந்த இடத்தில் ஒப்பந்ததாரருடன் நீதிமன்ற வழக்கு இருக்கிறது என்றே கூறி வருகின்றனர். ஆனால், அந்த வழக்கை முடிக்க முடியும் என்ற வாய்ப்புகள் இருந்தபோதும், அசட்டையாக மாநகராட்சி நிர்வாகம் இருக்கிறது.
இதேபோலத்தான், மெயின்கார்டுகேட் அருணாசல மன்றம் அருகேயுள்ள சத்திரத்தில் வணிக வளாகம் கட்ட பலமுறை கோரி வந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அந்தக் கட்டடம் எந்தப் பயனும் இன்றி இப்போது பாழடைந்தும்விட்டது. சத்திரம் பேருந்து நிலையத்தில் தண்ணீர் தொட்டிக்கு கீழ் 40 கடைகளைக் கட்டி ஏலம் விடலாம் என்று மாநகராட்சி முடிவு செய்த சில நாள்களில் 580 விண்ணப்பங்கள் தீர்ந்துள்ளனவாம். அப்படியானால், வியாபாரிகளுக்கான தேவை எந்தளவுக்கு இருக்கிறது என்பதை மாநகராட்சி நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும்' என்றார் ஸ்ரீராமன்.
இதுதொடர்பாக நீண்ட காலமாகப் போராடி வரும் திருச்சி பர்மா மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.ஆர். கோபாலகிருஷ்ணன் கூறியது:
"மாநகராட்சியால் வணிக வளாகம் கட்டும் அளவுக்கு நிதியாதாரம் இல்லையென்றால், நாங்களே அந்த இடத்தில் கட்டடம் எழுப்பிக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம். இந்தத் திட்டத்தை பல முறை மாநகராட்சி நிர்வாகத்திடமும், நீதிமன்றத்திலும், தமிழக முதல்வர்களிடமும் கொடுத்திருக்கிறோம்.
இன்னும் ஒருபடி மேலேபோய், அரசு நிதி நிறுவனமான "ரெப்கோ' வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு முழு நிதியாதாரத்தையும் பெற்றுக் கொண்டு கட்டடம் எழுப்பத் தயாராக இருக்கிறோம். வங்கியிலிருந்தும் முறைப்படியான உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.
சிங்காரத்தோப்பு பகுதியிலும், தெப்பக்குளம் பகுதியிலும் கடை வைத்துள்ள நாங்கள் இந்த இடத்துக்கு பெயர்ந்தால் மக்கள் ஒரே இடத்தில் தங்களின் தேவைகளை வாங்கிக் கொள்வதற்கும், இப்போது நாங்கள் இருக்கும் இடங்களைக் காலி செய்து கொள்வதால் அங்கிருக்கும் போக்குவரத்து நெரிசலும் தீர்ந்துவிடும்' என்றார் கோபாலகிருஷ்ணன்.
அப்புறம் என்னதான் பிரச்னை? சிங்காரத்தோப்பு பகுதியிலுள்ள பெரிய கடைகள் இந்த இடத்தை "வாகன நிறுத்துமிடம்' என்ற பெயரில் கபளீகரம் செய்ய முயன்று வருவதாக உலவி வரும் வதந்தி உண்மைதானோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.