மேலவை வாக்காளர் பட்டியலில் திரும்பத் திரும்ப வரும் பெயர்கள்

திருச்சி, ஜன. 21: தமிழ்நாடு சட்ட மேலவைத் தேர்தலுக்காக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் திரும்பத் திரும்ப இடம்பெற்றுள்ளன. இப்பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்பிருக்
Updated on
2 min read

திருச்சி, ஜன. 21: தமிழ்நாடு சட்ட மேலவைத் தேர்தலுக்காக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் திரும்பத் திரும்ப இடம்பெற்றுள்ளன. இப்பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதால், மொத்த வாக்காளர் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தமிழ்நாடு சட்ட மேலவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் 22-ம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் சேர்க்கைக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாக்காளர் துணைப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

 கிழக்கு மத்திய பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளுக்கு உள்பட்ட திருச்சி மாவட்டத்துக்கான வாக்காளர் பட்டியல் மாநகராட்சி அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

 திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 35,508 பட்டதாரி வாக்காளர்களில் 21,724 பேர் ஆண்கள், 13,784 பேர் பெண்கள். மொத்தமுள்ள 6,939 ஆசிரிய வாக்காளர்களில் 3,379 பேர் ஆண்கள், 3560 பேர் பெண்கள். மேலும், உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த 846 பேர் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

 இந்நிலையில், வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பலரது பெயர்களும் திரும்பத் திரும்ப இடம்பெற்றுள்ளன. அதாவது, திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட வாக்காளர் பட்டியலின் பாகம் 22-ல் மொத்தம் 1,912 வாக்காளர்கள் உள்ளனர்.

 இதில், 14-ம் பக்கத்தில் புத்தூரைச் சேர்ந்த எஸ். கீதா என்பவரின் பெயர், 778, 779, 780 ஆகிய வரிசை எண்களில் தொடர்ந்து மூன்று முறை இடம்பெற்றுள்ளது. அதேபோல, 24-ம் பக்கத்தில் தில்லைநகரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவரின் பெயர், 1044, 1045 ஆகிய வரிசை எண்களில் தொடர்ந்து இரண்டு முறை இடம்பெற்றுள்ளது.

 48-ம் பக்கத்தில் உறையூர் பாண்டமங்கலம் செட்டித்தெருவைச் சேர்ந்த உமாமகேசுவரி என்பவரின் பெயர் 1742, 1743 ஆகிய வரிசை எண்களில் தொடர்ந்து இரண்டு முறை இடம்பெற்றுள்ளது. 50-ம் பக்கத்தில் உறையூர் வடக்கு அச்சடிக்காரத்தெருவைச் சேர்ந்த ஜோனா ஜோஸ்பின் என்பவரின் பெயர் 1808, 1809 ஆகிய வரிசை எண்களில் தொடர்ந்து இரண்டு முறை இடம்பெற்றுள்ளது. 22-வது பாகத்தில் மட்டும் இத்தனை முறை வாக்காளர் பெயர்கள் திரும்பத் திரும்ப, அதுவும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதைப்போன்ற செய்ய வேண்டிய திருத்தங்கள் இருப்பதாகவும், அவற்றை திருத்துவதற்கு வாய்ப்பும் இருக்கிறது என்றும் தேர்தல் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க விண்ணப்பித்தவர்கள், சந்தேகத்தின் பேரில் மீண்டும், மீண்டும் விண்ணப்பங்களை அளித்திருக்கலாம் எனத் தெரிகிறது. அவ்வாறு இருப்பின், பட்டியலைத் தட்டச்சு செய்பவர் "தொடர்ந்து வரும்' இந்தப் பெயர்களை கவனிக்காமல் விட்டது எப்படி என்று கேள்வி எழுகிறது.

 இதற்கிடையே தவறுகளும், திரும்பத் திரும்ப வரும் பெயர்களிலும் இருக்கின்றன. குறிப்பாக, மூன்று முறை பெயர் திரும்பத் திரும்ப வரும் கீதாவின் முதல் பெயரில் அவர் "ஆண்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் நபர்கள் மற்ற இரு பெயர்களை நீக்கிவிட்டு, தவறாக உள்ள முதல் வரிசைப் பெயரை அப்படியே (ஆண்!) விட்டுவிட்டார்களேயானாலும் சிக்கல்.

 அதேபோல, ஞானப்பிரகாசம் என்ற பெயரில் முதல் வரிசைப் பெயர் "ஞானபிராகசம்' என்றிருக்கிறது.

 ஆசிரியர் தொகுதிக்கு ஒரு விண்ணப்பமும், பட்டதாரி தொகுதிக்கு ஒரு விண்ணப்பமும் கொடுத்த இவரது பெயர், ஒரே வரிசையில் இரண்டாக வந்திருக்கிறது.

 மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும்போதே இத்தனைக் குளறுபடிகள் ஏற்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் பிரிவில் பணியாற்ற போதிய பணியாளர் வசதியில்லை என்பதே இத்தனைக்கும் காரணம் என்றும் கூறப்படுகிறது.

 தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அலுவலர் பணியிடத்துக்குக் கீழும், மாநில தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையருக்குக் கீழும் முன்பைவிடவும் அதிகமாக அதிகாரிகளையும், பணியாளர்களையும் நியமித்துள்ள நிலையில், மாவட்ட அளவில் பணிகளை மேற்கொள்ள எந்த முன்னேற்றமான ஏற்பாட்டையும் செய்யவில்லை என்பதே பணியாளர்களின் குற்றச்சாட்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com