சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பொதுமக்களுக்கு இடையூறாக விளம்பரப் பதாகைகள்

கரூர், ஜூன் 2: கரூர் நகராட்சிப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறாக கட்சிகளால் விளம்பரம், வாழ்த்துப் பதாகைகள் வைக்கப்படுவது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:26 am

எஸ்.​ முத்​துக்​கு​மார்

கரூர், ஜூன் 2: கரூர் நகராட்சிப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறாக கட்சிகளால் விளம்பரம், வாழ்த்துப் பதாகைகள் வைக்கப்படுவது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 பொது இடங்களில் தனியார், கட்சிகள், இயக்கங்கள் விளம்பரப் பதாகைகளை அமைக்க வேண்டுமெனில், உரிய முன் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

 நகராட்சியின் கட்டுப்பாட்டிற்குள் வரும் பகுதியெனில் நகராட்சியிடமும், சம்பந்தப்பட்ட காவல் துறையினரிடமும் முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். விழாக்கள் நடைபெறும் நாள்களைப் பொருத்து அனுமதி வழங்கப்படும். மேலும், அதற்கான கட்டணத்தையும் நகராட்சியில் செலுத்தியிருக்க வேண்டும்.

 ஆனால், இந்த நடைமுறைகள் கடந்த காலங்களில் யாராலும் கடைப்பிடிக்கப்படவில்லை. கண்ட இடங்களிலெல்லாம் விளம்பரப் பதாகைகள் அமைக்கப்பட்டன.

 இவை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் அமைக்கப்பட்டதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியதோடு, விபத்துகளுக்கும் உள்ளாகினர். எனவே, முறையற்ற விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டுமென பல்வேறு பொதுநல அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.

 இதையடுத்து, மாவட்ட நிர்வாகமும் சில எச்சரிக்கைகளை விடுத்தது. பின்னர், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்தன.

 கட்சியினர் விளம்பரப் பதாகைகளை அமைத்தால் அது வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படுவதோடு, அவை அகற்றப்படும் நிலையும் இருந்தது.

 எனவே, நகருக்குள் அரசியல் கட்சியினரும், மற்றவர்களும் எந்த விளம்பரப் பதாகைகளையும் அமைக்கவில்லை. இதனால், பொதுமக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டதுடன், இதே நிலை தொடர வேண்டும் எனவும் விரும்பினர்.

 இந்நிலையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் வென்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துக் கூறியும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் அதிமுக, திமுகவினர் கரூர் நகரில் பேருந்து நிலையம் அருகிலும் நகருக்குள் மற்ற முக்கியப் பகுதிகளிலும் பதாகைகளை அமைத்தனர்.

 வி. செந்தில்பாலாஜிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதும் மகிழ்ச்சியடைந்த அதிமுகவினர், அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் ஏராளமான டிஜிட்டல் பதாகைகளை அச்சிட்டிருந்தனர். கரூருக்கு அமைச்சர் வரும்போது அவற்றை நகருக்குள் வைக்கவும் திட்டமிட்டிருந்தனர்.

 ஆனால், அதிமுகவினர் ஆடம்பர வரவேற்புகள் கொடுக்கக் கூடாதென முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததைத் தொடர்ந்து, நகருக்குள் ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான விளம்பரப் பதாகைகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.

 மேலும், அச்சிடப்பட்டிருந்த பதாகைகளை வைக்கும் திட்டத்தையும் அதிமுகவினர் கைவிட்டனர்.

 இதனால், அதிமுகவினர் பரபரப்பு இல்லாமலும், பொதுமக்கள் நிம்மதியுடனும் புதிய ஆட்சியை வரவேற்றனர்.

 இனிமேல், விளம்பரப் பதாகைகளை அமைக்கும் கலாசாரம் பரவாது என்று நினைத்திருந்த மக்களை, கரூர் நகருக்குள் கடந்த இரு நாள்களாக அமைக்கப்பட்டு வரும் வரவேற்பு பதாகைகள் எரிச்சலடைய வைத்துள்ளன.

 கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெறும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் மதிமுக பொதுச் செயலர் வைகோவை வரவேற்று கரூர் - கோவை சாலையில் சென்டர்மீடியன் முழுவதும் மதிமுக கொடிகளும், படங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அண்ணா சிலை முன்பும் வைகோ படம் வைக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் வெள்ளிக்கிழமை பிறந்த நாள் காணும் திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து திமுகவினரும், வாழ்த்துப் பதாகைகள் மற்றும் கருணாநிதியின் உருவப்படங்கள் தாங்கிய பதாகைகளை வைகோவின் படங்களுக்கு இடையே வைத்துள்ளனர். இதனால், மீண்டும் பழைய நிலைக்கு கரூர் திரும்பியுள்ளது.

 இவ்வாறு விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி, காவல் துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவை ஆட்சேபனைக்குரிய சில பதாகைகளை மட்டும் அகற்றிவிட்டு, தங்களின் கடமையை முடித்துக் கொண்டன.

 எனவே, விபத்துகள் நிகழ வழிவகுக்கும் இதுபோன்ற பதாகைகளை அமைப்பதில், தேர்தலின்போது கடைப்பிடிக்கப்பட்ட அதே நடைமுறையை, அரசியல் கட்சியினர் மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும், மாவட்ட நிர்வாகமும் தங்களது கடமையைச் செய்ய வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.