அணுகு சாலை அமைக்கப்படுமா?

திருவெறும்பூர், ஜூன் 6: திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி முதல் பழைய பால்பண்ணை வரை அணுகு சாலை அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடு
Updated on
2 min read

திருவெறும்பூர், ஜூன் 6: திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி முதல் பழைய பால்பண்ணை வரை அணுகு சாலை அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

   தேசிய நெடுஞ்சாலை எண் 67 எனப்படும் திருச்சி - தஞ்சை சாலையில் கடந்த 2007 முதல் ஆந்திரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

   இந்தச் சாலைத் திட்டத்தில் துவாக்குடி முதல் பழைய பால்பண்ணை வரை அணுகு சாலை அமைக்கப்படவும் இருந்தது.

   ஆனால், இந்தச் சாலை அமைந்தால் தாங்கள் பாதிக்கப்படுவோம் எனக் கருதிய செல்வாக்குள்ள தொழிலதிபர்களும், வியாபாரிகளும் சேர்ந்து அணுகு சாலை வருவதைத் தடுத்தனர்.

   பொதுவாக, நான்கு வழிச் சாலையை அமைக்கும்போது அந்தப் பகுதி மக்களுக்கு எந்தப் பாதிப்பு இல்லாமல் இருக்க, முதலில் அணுகு சாலையை அமைக்க வேண்டும். ஆனால், இந்த நான்கு வழிச் சாலையில் துவாக்குடி முதல் பழைய பால்பண்ணை வரை அணுகு சாலை அமைக்கப்படவில்லை.

   திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிப்பது திருவெறும்பூர் பகுதியாகும். இங்குதான் திருச்சி பெல் நிறுவனம், துப்பாக்கித் தொழில்சாலை, தொழில்நுட்பப் பூங்கா, தேசிய தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட ஏராளமான தொழில்சாலைகள், பள்ளி, கல்லூரிகள் உள்ளன.

   மேலும், பல்வேறு ஊர்களுக்கு இந்த வழியாக நாள்தோறும் ஏராளமான பேருந்துகளும், சரக்குப் பெட்டக வாகனங்களும் செல்கின்றன. இதனால், இப்பகுதி மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

    இந்தச் சாலையை ஏராளமானோர் பயன்படுத்தும் நிலையில், இதனருகில் அணுகு சாலை அமைக்காததால் நாள்தோறும் விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.

   இதையடுத்து, விபத்துகளைத் தடுக்கவும், அணுகு சாலையை மீட்கவும் துவாக்குடி முதல் அரியமங்கலம் பழைய பால்பண்ணை வரை அணுகு சாலை மீட்புக் கூட்டமைப்பை அப்பகுதி மக்கள் தொடங்கினர்.

    அணுகு சாலையை மீட்க திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கடந்தாண்டு சாலை மறியலையும் நடத்தினர்.  அப்போது போலீஸôர் நடத்திய தடியடியில் பலர் காயமடைந்தனர். பின்னர், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் எனப் பல போராட்டங்கள் நடந்தன.

  இதையடுத்து, அப்போதைய தமிழக அரசு அணுகு சாலை அமைக்க ரூ. 99 கோடிக்கு திட்ட மதிப்பீட்டைத் தயாரித்து, மத்திய நெடுஞ்சாலை அமைச்சகத்துக்கு அனுப்பியது.

   இதை ஆராய்ந்த மத்திய அரசு ரூ. 54 கோடியை தரத் தயாராக உள்ளதாகவும், நிலத்தை கையகப்படுத்த ஆகும் ரூ. 45 கோடியை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்றும் கடந்தாண்டே கூறியதாம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.

   இதனால், இந்தப் பகுதி மக்கள் பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்கவும் முடிவெடுத்திருந்தனர். பின்னர், அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் இந்த முடிவை அவர்கள்  வாபஸ் பெற்றனர்.

    சம்பந்தப்பட்ட நிறுவனம் குறிப்பிட்ட பகுதியில் இதுநாள் வரை அணுகு சாலையை அமைக்கவில்லை. மேலும், திருவெறும்பூர் மேம்பாலம், அரியமங்கலம் மேம்பாலப் பணிகள் தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளன.

   பேருந்து நிறுத்தங்களில் இதுவரை நிழல் குடை, குடிநீர் வசதி செய்யப்படவில்லை. கிராம, நகரச் சாலைகளை இணைக்கும் வசதிகளையும் இதுவரை செய்து தரவில்லை. சாலையின் நடுவிலும்,பேருந்து நிறுத்துமிடத்திலும் தற்போதுதான் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

   இவ்வாறாக எந்த அடிப்படை வசதிகளையும் செய்யாமல் தற்போது துவாக்குடி அருகே அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியில் கடந்த 12 ஆம் தேதி முதல் வரி வசூலில் இறங்கியுள்ளது சாலையை அமைக்கும் தனியார் நிறுவனம். இதனால், வாகன ஓட்டிகளும், அணுகு சாலை மீட்புக் கூட்டமைப்பினரும், பொதுமக்களும் அதிருப்தியில் உள்ளனர்.

   இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியது:

   சாலைப் பணிகளை முழுமையாக முடித்தவுடன்தான் வாகன வரி வசூல் செய்ய வேண்டும். ஆனால், திருச்சி - தஞ்சை சாலையில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற சாலைப் பணிகள் இதுவரை முழுமையடையவில்லை. ஆனால், தற்போது வரி வசூலில் அந்த நிறுவனம் இறங்கியுள்ளது என்றனர்.

   அணுகு சாலை மீட்புக் குழுவினர், பொதுமக்கள் கூறியது:

   முதலில் 6 வழிச் சாலை அமைக்கத் திட்டம் தீட்டப்பட்டு, பின்னர் சில அரசியல் கட்சிகள், வியாபாரிகளின் நிர்பந்தத்தால் 4 வழிச் சாலை  அமைக்கப்படுகிறது. இருந்தும் இந்தச் சாலையின் இரு பக்கங்களிலும் முதலில் அமைக்க வேண்டிய அணுகு சாலையை அமைக்கவில்லை.

   இதையடுத்து நடைபெற்ற போராட்டங்களுக்குப் பிறகு அப்போதைய  அமைச்சர்கள் வெள்ளக்கோயில் சாமிநாதன், கே.என். நேரு ஆகியோர் திருவெறும்பூர், துவாக்குடியில் நேரில் ஆய்வு செய்து, அணுகு சாலையை அமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

   மேலும், அணுகு சாலை அமைக்காத தனியார்  நிறுவனம் மீது உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அணுகு சாலை மீட்புக் கூட்டமைப்பினர் சார்பில் பொது நல வழக்கும்  தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த நிறுவனம் வரி வசூலில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

   எனவே, தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு இந்த அணுகு சாலையை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com