திருச்சி, செப். 7: பிளாஸ்டிக் தடுப்பு, விழிப்புணர்வு என விதவிதமான அறிவிப்புகளுக்கு மத்தியில், திருச்சி மாநகரில் மட்டும் ஜவுளி, பாத்திரக் கடைகளில் இருந்து நாள்தோறும் கோடிக்கணக்கில் பிளாஸ்டிக் பைகள் வெளியாகின்றன.
புவி வெப்பமாகிறது, ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டிருக்கிறது, விளைநிலங்கள் பாழாகின்றன என்ற அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, பிளாஸ்டிக் உபயோகத்தைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாக அவ்வப்போது பரபரப்பான அறிவிப்புகள், எச்சரிக்கைகள் காணப்படுவது வழக்கமானதாவிட்டது.
ஆனாலும்கூட ஆறுதலாக கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் ஓரிரு மாவட்டப் பகுதிகளில் பிளாஸ்டிக் பைகளில் பொருள்களை வாங்கிச் செல்லுதல் பெருமளவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. அது வெற்றிகரமாகவும் தெரிகிறது.
திருச்சியில் முன்பு ஆட்சியராக இருந்த மகேசன் காசிராஜன் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அவர் இருந்தவரையும் அது கடைப்பிடிக்கப்படவில்லை. வெறும் அறிவிப்பாக மட்டுமே நின்றும்விட்டது. அதைத் தொடர்ந்து எந்த அறிவிப்பும் இல்லை. நடவடிக்கையும் இல்லை.
ஆனால், இப்போது ஒரு நடவடிக்கை கவனிக்கத்தக்கதாக காணப்படுகிறது. திருச்சி மாநகரிலுள்ள ஸ்பென்சர், ரிலையன்ஸ், பெமினா ஷாப்பிங் மால் போன்ற தனியார் பல்பொருள் விற்பனை அங்காடிகளில் பொருள்களை வாங்கச் சென்றால் பிளாஸ்டிக் பைகளுக்கு தனிக் கட்டணம்.
நாகரிகத்தின் உச்சத்தில் கடைகளுக்குச் செல்லும்போது எந்தப் பையையும் எடுத்துச் செல்வதில்லை. எத்தனை பெரிய பொருளை வாங்கினாலும்கூட, திருச்சியிலுள்ள என்எஸ்பி சாலை, பெரியகடைவீதி பகுதியிலுள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் உண்டு.
இந்த நிலையில், பிளாஸ்டிக் பைகளுக்கான கட்டணம் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. பொருள்களை வாங்கிவிட்டு "பில்' போடுவதற்காக செல்லும்போது அந்தப் பணிப் பெண் தெளிவாகக் கூறி விடுகிறார்.
அரசு உத்தரவுப்படி வீட்டிலிருந்து பைகளை எடுத்து வர வேண்டும், அதற்காக இங்கு வழக்கமாக கொடுக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்திருக்கிறோம் என்கின்றனர். சிறிய அளவிலான பை ரூ. 1, பெரிய அளவிலான பை ரூ. 4. நடுத்தர அளவிலான பை ரூ. 2.
இதற்கென அண்மையில் மத்திய சுற்றுச்சூழல் துறையின் சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட சுற்றறிக்கையின் விளைவுதான் இது.
கட்டணம் என்றவுடன் கையிலிருக்கும் சிறிய அளவிலான பைகளுக்குள் அத்தனை பொருளையும் திணித்துச் செல்லும் காட்சியையும் காண முடிகிறது. பிளாஸ்டிக் பொருள் கட்டுப்படுத்துதலின் ஓர் அம்சமாக இந்த நடவடிக்கை தெரிகிறது.
என்றாலும், நாளொன்றுக்கு கோடிக்கணக்கில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படும் பகுதி திருச்சி மாநகரிலுள்ள என்எஸ்பி சாலை, பெரிய கடைவீதி, சின்னக் கடைவீதி, சிங்காரத்தோப்பு பகுதிகள்தான். இந்தப் பகுதியிலுள்ள பாத்திரக் கடைகள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகளிலும்கூட பிளாஸ்டிக் பைகள் ஏராளமாக பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு காலத்தில் ஜவுளிக் கடைகளின் பிரசித்தமான மஞ்சள் துணிப் பைகளை இப்போது காணவில்லை. அதைவிட விலைக் குறைந்த, நாகரிகமாகக் கருதப்படும் வண்ண வண்ண பிளாஸ்டிக் பைகளை கெஞ்சிக் கூத்தாடி கூடுதலாக வாங்கிச் செல்லும் மக்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
"கட்டைப் பைகள்' எனப்படும் பைகளும் இப்போது பிளாஸ்டிக் கலப்பில் வந்துவிட்டன. கொள்ளளவு அதிகமாக இருக்கும் இந்தப் பைகளும் இப்போது மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. அதேபோல, திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு ஏதாவதொரு பழத்தைப் போட்டு, தாம்பூலமாக அளிக்கும் வழக்கம் அதிகரித்திருக்கிறது. இந்த விஷேசங்களுக்கான தாம்பூலப் பைகளும் பிளாஸ்டிக் கலப்புள்ள மஞ்சள் (!) பைகளே. திருச்சியின் பெரிய பஜார் என்றழைக்கப்படும் பகுதியிலுள்ள அனைத்துக் கடைகளையும் சேர்த்து நாளொன்றுக்கு கோடிக்கணக்கான பிளாஸ்டிக் பைகளும், லட்சக்கணக்கான கட்டைப் பைகளும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.
இதைக் கட்டுப்படுத்த அரசு நிர்வாகங்கள் உரிய நடவடிக்கையைப் படிப்படியாக மேற்கொள்ள வேண்டும் என்ற குரல் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்து எழுந்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.