ஸ்ரீரங்கத்தைக் கொடுத்தவருக்கு திருச்சி மேற்கு!
திருச்சி, செப். 16: தனக்காக ஸ்ரீரங்கத்தை விட்டுக் கொடுத்த பரஞ்சோதிக்கு மேற்குத் தொகுதியில் வாய்ப்பளித்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தலில் திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, அமைச்சரான என். மரியம்பிச்சை, சென்னைக்கு காரில் சென்ற போது பாடாலூரில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து காலியாக இருந்த இந்தத் தொகுதிக்கு வரும் அக்டோபர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் திங்கள்கிழமை (செப். 19) தொடங்குகிறது.
மேற்குத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் கே.என். நேரு நிலப்பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது கடலூர் மத்திய சிறையில் இருக்கிறார்.
திமுக தரப்பில் மீண்டும் கே.என்.நேருவே வேட்பாளர் என்று கூறப்படுகிறது. ஆனால், தொடர்ச்சியாக அவருக்கு ஜாமீன் கிடைக்காததும், அவரது வீடுகளில் ஊழல் தடுப்பு போலீஸôர் அதிரடி சோதனை நடத்தி வருவதும் திமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில்தான், அதிமுக வேட்பாளராக மு. பரஞ்சோதியை அறிவித்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. மேற்குத் தொகுதி உள்ளடங்கிய மாநகர் மாவட்ட அதிமுகவில் 2 ஆண்டுகள் இணைச் செயலர், 4 ஆண்டுகள் மாநகர் மாவட்டச் செயலர் போன்ற பொறுப்புகளை வகித்தவர் பரஞ்சோதி.
ஆனாலும், திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளராக அவரை திருச்சி அதிமுகவினர் எதிர்பார்க்கவில்லை. இந்த எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்ததற்கு வலுவான காரணம், முதல்வர் தொகுதியான ஸ்ரீரங்கம் தொகுதிக்கு கட்சிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதுதான்.
ஸ்ரீரங்கம் தொகுதி அலுவலகத்தில் தொகுதி மக்களின் மனுக்களைப் பெற்று அனுப்ப தனி ஏற்பாட்டைச் செய்து, ஏழை, எளிய இளைஞர்களுக்காக தையல், கணினிப் பயிற்சிக்கான பணிகளையும் செய்துள்ள நிலையில், பரஞ்சோதிக்கு வேட்பாளர் வாய்ப்பளிக்கப்படாது என்றே அதிமுகவினர் கருதி வந்தனர்.
வெற்றிவாய்ப்பில் சந்தேகமில்லை என்ற எண்ணம் இருந்தாலும், சாதாரணமாகக் கருதி இழந்துவிடக் கூடாது என்று பிரபலமான முகமாகத் தேடித்தான் பரஞ்சோதி அறிவிக்கப்பட்டிருக்கிறார் என்று தற்போது அதிமுகவினர் குறிப்பிடுகின்றனர்.
ஆனால், தனக்காக (ஸ்ரீரங்கம்) தொகுதியை விட்டுக் கொடுத்த பரஞ்சோதிக்கு, மீண்டும் பேரவைக்குள் நுழைய வாய்ப்பளித்திருக்கிறார் ஜெயலலிதா என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
