ஸ்ரீரங்கம் தெருக்களில் மண்டிக் கிடக்கும் குப்பைகள்!

திருச்சி, பிப். 11: முதல்வர் தொகுதியான ஸ்ரீரங்கம் பகுதியிலுள்ள தெருக்களில் குப்பைத் தொட்டிகள் குப்பை நிறைந்து வழிந்து தெருக்களில் பரவிக் கிடக்கின்றன. குப்பைத் தொட்டிகளிலும், காலி இடங்களிலும் பிளாஸ்டிக
Updated on
2 min read

திருச்சி, பிப். 11: முதல்வர் தொகுதியான ஸ்ரீரங்கம் பகுதியிலுள்ள தெருக்களில் குப்பைத் தொட்டிகள் குப்பை நிறைந்து வழிந்து தெருக்களில் பரவிக் கிடக்கின்றன. குப்பைத் தொட்டிகளிலும், காலி இடங்களிலும் பிளாஸ்டிக் பைகளும், கழிவுகளும் ஏராளமாகக் கிடக்கின்றன.

  ஆனால், ஸ்ரீரங்கம், திருவானைக்கா முக்கிய வீதிகள் மட்டும் முதல்வர் வருகைக்காகப் பளிச்சிடுகின்றன!

  அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் முதல்வர் ஜெயலலிதா. இதைத் தொடர்ந்து, ஜூன் 19-ம் தேதி முதல் முறையாக ஸ்ரீரங்கம் வந்தார் அவர்.

  ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட பல திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்துவிட்டுச் சென்ற ஜெயலலிதா, இரண்டாம் முறையாக திங்கள்கிழமை (பிப். 13) ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வருகிறார். இந்த முறை நிகழ்ச்சி திருவானைக்கா வடக்கு உள்வீதியில்.

  முதல்வர் சொந்தத் தொகுதிக்கு வருகிறார் என்றவுடன் மாவட்ட நிர்வாகம் அனைத்துத் துறைகளையும் முடுக்கிவிட்டிருக்கிறது. மாநகராட்சி சார்பில் காவிரிப் பாலத்தில் விளக்குகள் அமைக்கும் பணியும், பூத்தொட்டிகள் வைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன.

  பொதுப் பணித் துறை பணியாளர்கள் கடந்த இரு நாள்களாக முதல்வர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

  இதற்கிடையே, ஸ்ரீரங்கம் பகுதி உள் தெருக்கள் வழக்கத்தைவிடவும் மோசமாக இருப்பதை அப்பகுதி பொதுமக்கள் குறையாகத் தெரிவிக்கின்றனர். கடந்த வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவிலிருந்து பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டு, மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

  அதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த உள்வீதிகள் குப்பைகள் சேர்ந்து மோசமாகக் காட்சியளிக்கின்றன.

  குறிப்பாக, மாநகராட்சி 5-வது வார்டு வீரேசுவரம் பகுதியில் கல்மேட்டுத் தெருவிலுள்ள நவீன கழிப்பறைக்கு எதிரே பழைய கழிப்பறைப் பகுதி குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கேயுள்ள இரு சுவர்களில், ஒன்றில் "குப்பைகளை உள்ளே கொட்டவும்' என்றும், மற்றொன்றில் "குப்பைகளை இங்கே கொட்டவும்' என்றும் எழுதப்பட்டுள்ளது.

  மொத்தத்தில் எங்கே கொட்டினாலும் வாரத்துக்கு ஒரு முறைதான் குப்பைகள் அள்ளப்படுகின்றன என்று வேதனை தெரிவிக்கிறார் அப் பகுதியைச் சேர்ந்த வசந்தி. இந்தக் குப்பைகளில் பெரும்பாலானவை பிளாஸ்டிக் பைகளும், டம்ளர்களும். பக்கத்திலுள்ள அருணா நகர், ராயர் தோப்பு, பாலாஜி கார்டன் ஆகிய பகுதிகளின் மொத்தக் குப்பையும் இங்கேதான் குவிக்கப்படுகிறதாம்.

  அருகே வீரேசுவரம் மேலத் தெருவில் ஒரு குப்பைத் தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. குப்பைத் தொட்டி சுவரில் "குப்பைகளை தொட்டிக்குள் கொட்டவும்' என்று எழுதப்பட்டிருக்கிறது. தொட்டி நிறைந்து வெளியே சாலையின் மறு முனை வரை குப்பைகள் நிறைந்திருக்கின்றன.

  அப்பகுதியிலுள்ள கால்நடைகளின் மேய்ச்சல் பகுதியாகவும் இந்தக் குப்பைத் தொட்டி இருக்கிறது. குப்பைகளுடன் தெரியாமல் பிளாஸ்டிக் கழிவுகள் மாடுகளின் வயிற்றுக்குள் சென்றுவிட்டால் அதன் உயிருக்கே சிக்கல்தான்.

  இப்படியிருக்கும் நிலையில்தான் ஸ்ரீரங்கத்தின் பிரதான சாலைகள் "பேட்ச்' பணிகள் பார்க்கப்பட்டு, சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு, பாலத்தில் அழகுக்காக பூத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீரங்கத்தின் முக்கிய வீதிகளில் தெரு விளக்குகளில் பல எரியவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றன. இதனால், இரவு நேரங்களில் வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com