தஞ்சையில் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படுமா?
தஞ்சாவூர், பிப். 17: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாகவே சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு


தஞ்சாவூர், பிப். 17: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாகவே சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பிரசாரம் அதிகமாக நடைபெறுகிறது. இதற்குக் காரணம், சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதுதான்.
விபத்துகளில் அதிகளவில் பாதிக்கப்படுவது இரு சக்கர வாகன ஓட்டிகளே. விபத்துகளின் போது இவர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டு, சம்பவ இடங்களிலேயே உயிரிழக்கின்றனர்.
இதைத் தடுக்க ஹெல்மெட் அணிய அரசு வலியுறுத்தி சட்டம் இயற்றியுள்ளது. எனினும், இதைச் சில மாவட்டங்களில் கடுமையாகவும், சில மாவட்டங்களில் பெயரளவிலும் காவல் துறையினர் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால், விபத்துகளின் எண்ணிக்கை குறையவில்லை என்றாலும், விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, தலைக் கவசம் அணிவதை தற்போது பல மாவட்டங்களிலும் போலீஸôர் அமல்படுத்தி வருகின்றனர்.
ஆனால், வளர்ந்து வரும் தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தச் சட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. வழக்கம்போல பொதுமக்களும் ஹெல்மெட் அணியாமலேயே வாகனங்களில் பயணிக்கின்றனர்.
இதனால், விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மது போதையில் வாகனங்களில் செல்வோர் தவறி கீழே விழும்பட்சத்தில், முதலில் தலையில் காயம் ஏற்பட்டே உயிரிழக்கின்றனர்.
இதைத் தடுக்க ஹெல்மெட் அணிவதை மாவட்டக் காவல் துறையினர் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதற்கு முதல் கட்டமாக தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
கடைமைக்காக நடத்தப்படும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு போன்ற நிலையை ஏற்படுத்தாமல், உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னர், இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பொதுமக்களும் சட்டத்திற்குப் பயந்து ஹெல்மெட் அணிவதைவிட தாங்களாகவே முன்வந்து தலைக் கவசம் அணிவர். இதனால், உயிரிழப்புகள் தடுக்கப்படுவதோடு, போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பதிலும் சிறந்த நகராக தஞ்சையை மாற்ற முடியும்.
இதுகுறித்து போலீஸôர் கூறியது:
தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் நிகழ்ந்த 300-க்கும் அதிகமான விபத்துகளால் 46 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஆண்கள் 39 பேர், பெண்கள் 7 பேர்.
மது போதையில் வாகனம் ஓட்டுவோரிடமிருந்து அபராதமாக ரூ. 15 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக 6 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டு, நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், ஹெல்மெட் சட்டத்தைக் கட்டாயமாக்கினால், அதிகளவில் வழக்குகள் பதிவாகும் நிலை ஏற்படலாம். எனவே, நிலுவை வழக்குகளை முடித்தால்தான், எங்களால் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்றனர் அவர்கள்.
எனவே, மனித உயிர்களைக் காக்கும் வகையில், மாவட்டக் காவல் துறை கட்டாய தலைக் கவசம் அணியும் சட்டத்தைத் தேவையான விழிப்புணர்விற்குப் பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...